காங்கிரஸ் புகழ்பாடும் ஹரீஷ் ராவத்!

By சந்தனார்

தன் கைகள் கட்டிப்போடப்பட்டிருப்பதாக ட்வீட் செய்து, காங்கிரஸ் தலைமையை விமர்சித்த உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், மீண்டும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், காங்கிரஸின் புகழ்பாடியிருப்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.

உத்தராகண்ட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கணேஷ் கோதியால், பாஜகவிலிருந்து காங்கிரஸுக்குத் தாவிய யஷ்பால் ஆர்யா, உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங் எனப் பலருடன் ஹரீஷ் ராவத்துக்குப் பிணக்கு இருக்கிறது. அடுத்த மாதம் உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் தனக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனும் அதிருப்தி ஹரீஷ் ராவத்துக்கு உண்டு. முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் தலைமை அவரை முன்னிறுத்தத் தயங்குகிறது என்றும் சொல்லப்படுகிறது.

“தேர்தல் கடலில் நாம் நீந்தியாக வேண்டும். ஆனால், அமைப்பு என்னை ஆதரிக்காமல், பாராமுகம் காட்டுகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்படுகிறது. நான் யாரைப் பின்தொடர வேண்டுமோ அவர்களின் ஆட்கள் என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்” என்றெல்லாம் சமீபத்தில் அவர் ட்விட்டரில் புலம்பியதன் பின்னணியில் இருப்பது இந்த விவகாரங்கள்தான்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றிருக்கிறார் ஹரீஷ். முக்கியமாக, ராகுல் காந்தியிடம் அவர் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தராகண்ட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கணேஷ் கோதியால், எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியைச் சந்திக்கவிருக்கின்றனர்.

முன்னதாக, நேற்று ஹரித்வாரில் மறைந்த முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்ததின விழாவைக் கொண்டாடிய ஹரீஷ், அங்கு தனது ஆதரவாளர்களையும் சந்தித்தார்.

இந்நிலையில்தான், “தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். காங்கிரஸின் கானங்களைப் பாடுவோம். உத்தராகண்டுக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்போம்” என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

இதற்கிடையே, ஹரீஷ் ராவத்தின் அதிருப்தியின் பின்னணி குறித்துப் பேசியிருக்கும் அவரது ஆதரவாளரும் ஆலோசகருமான சுரிந்தர் அகர்வால், “ராகுல் காந்தியின் கூட்டங்களில் ஹரீஷ் ராவத்தின் உருவப்படம் அடங்கிய போஸ்டர்கள் அகற்றப்படுகின்றன. தேவேந்திர யாதவின் முன்னிலையில் இதெல்லாம் நடக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

பஞ்சாப் காங்கிரஸில் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் நடந்த பிரச்சினைகளில் சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஹரீஷ் ராவத். இப்போது அதேபோன்ற சூழலைத் தன் சொந்த மாநிலத்தில் எதிர்கொள்கிறார்.

ஹரீஷ் ராவத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங், “நீங்கள் எதை விதைத்தீர்களோ அதை அறுவடை செய்கிறீர்கள்” என்று ஹரீஷ் ராவத்தைக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

கேப்டன் அமரீந்தர் சிங்குடன் ஹரீஷ் ராவத்

காங்கிரஸிலிருந்து வெளிவந்து அமரீந்தர் சிங் புதிய கட்சியைத் தொடங்கியதுபோலத்தான் ஹரீஷ் ராவத் விஷயத்திலும் நடக்கும் என்கிறார்கள் உத்தராகண்ட் பாஜகவினர்.

உத்தராகண்டிலும் கலகம் வெடிக்குமா, ராகுலின் சமரச முயற்சிகள் பலிக்குமா என இன்றோ நாளையோ தெரிந்துவிடும்!

இந்தச் செய்திகளையும் வாசியுங்கள்...

உத்தராகண்டிலும் ஒரு கலகம்: ஹரீஷ் ராவத் அதிருப்தியின் பின்னணி என்ன? உச்சகட்டத்தில் உட்கட்சிக் குழப்பங்கள்! கரை சேருமா காங்கிரஸ்? பஞ்சாப் பரீட்சை: காங்கிரஸுக்கு வெற்றியா, தோல்வியா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE