அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 17-ம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த 17-ம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல் துறை தெரிவித்துள்ளது.
தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் போலீஸார் தேடிவருகின்றனர். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்(டிச.22) ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், ராஜேந்திர பாலாஜி மட்டுமின்றி அவரது தனிச் செயலர்களையும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் காவல் துறை சார்பில் நேற்று(டிச.23) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது விளக்கத்தைக் கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில், சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்னொரு புகார் தரப்பட்டிருக்கிறது. விருதுநகர் எஸ்பிக்கு வந்துள்ள இந்தப் புகாரில் முகாந்திரம் உள்ளாதா என காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளது, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.