கேரள மாநிலத்தின் திருகாக்கரைத் தொகுதி எம்எல்ஏவும், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான பி.டி.தாமஸ்(70) உடல்நலமின்மையால், இன்று காலமானார். சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளின் போது சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்த பி.டி.தாமஸ், 2 புத்தகங்களும் எழுதியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியே இருந்த பி.டி.தாமஸ், தன் மரணத்துக்குப் பின் செய்யவேண்டிய விசயங்கள் குறித்து அவரது நெருங்கிய நண்பர் டிஜோ காப்பனிடம் விளக்கியிருந்தார். அவர்மூலம் இந்தத் தகவல்கள் இப்போது வெளியாகி அனைவரையும் உருகவைத்துள்ளது.
முன்னாள் எம்பி, சிட்டிங் எம்எல்ஏ ஆகிய பதவிகளைக் கொண்டிருந்த தாமஸ், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அண்மையில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கூட உறுதியான குரலில் மக்கள் பிரச்னைகளைப் பேசினார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
எர்ணாக்குளம், மகாராஜா கல்லூரியில் படித்தபோதே கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக இருந்தார் தாமஸ். கடந்த 2009-ம் ஆண்டு இடுக்கி பாராளுமன்றத் தொகுதியில் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடியிருந்தார் பி.டி.தாமஸ். தொடர்ந்து 2014-ம் ஆண்டிலும் அவருக்கே சீட் கொடுக்க கட்சி தயாரானது. அப்போது தாமஸ், மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து கஸ்தூரி ரங்கனுக்கும் முன்பே அமைக்கப்பட்ட காட்கில் கமிட்டியை ஆதரித்தது, சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் கட்சியே காட்கில் கமிட்டியை நிராகரித்தபோதும் பி.டி.தாமஸ் அதில் உறுதியாக இருந்தார். இதனாலேயே இடுக்கியில் இருக்கும் சீரோ மலபார் சபைக்கும், பி.டி.தாமஸுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் தாமஸுக்கு திருச்சபை எதிர்ப்பு காட்டவே, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பினார்.
தாமஸ், கல்லூரித் தோழியான உஷா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் இருந்தே தன் இறப்பை எதிர்நோக்கியிருந்த தாமஸ், ‘தன் உடலை புதைப்பதற்குப் பதில் எரிக்க வேண்டும். என் சாம்பலை என் அம்மாவின் கல்லறையில் வைக்கவேண்டும். எந்த மத சடங்குகளும் இல்லாமல் என் இறுதிச்சடங்கு நடைபெறவேண்டும்’ எனவும் கேட்டிருந்தார். இதேபோல், அவரது கண்களையும் தானம் செய்திருந்தார்.
வயலார் ராமவர்மா எழுதிய ‘சந்திரகலபம்’ எனத் தொடங்கும் பாடலை, தன் உடலை எரியூட்டும் போது இசைக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார் தாமஸ். ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் கேரளத்தில் வந்து பிறக்கவேண்டும்’ என்பதே இந்தப்பாடலின் மையக்கரு. 1991 முதல் 2001 வரை தொடுபுழா தொகுதி எம்எல்ஏவாகவும், இப்போது இரண்டாவது முறையாக திருகாக்கரை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துவந்தார் பி.டி.தாமஸ்.
அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பி.டி.தாமஸ் தன் கட்சியின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் சட்டமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தன் மனதில் தோன்றுவதை முன்வைப்பவர். கேரளம் நல்ல நாடாளுமன்ற, சட்டமன்றவாதியை இழந்துவிட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துடிப்புமிக்க நபராகவும், உதவும் குணம் கொண்டவராகவும் இருந்தவர் பி.டி.தாமஸ் என தன் இரங்கலில் தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. பி.டி.தாமஸின் இறப்பு, கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.