மேற்கு வங்க நகராட்சி தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 93 சதவீத வெற்றி

By ஆர். ஷபிமுன்னா

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், மாநிலத்தின் நகரசபை தேர்தலில் 93 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் தலைவியான மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராகத் தொடர்கிறார். இவருக்கான ஆதரவு தொடரும்விதமாக, நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இங்குள்ள 144 இடங்களில் 134-ல் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது. இதில் திரிணமூலுக்கு 72 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மற்ற கட்சிகள் பாஜக 9.21, இடதுசாரி 11.89 சதவீத வாக்குகளையேப் பெற்றுள்ளன.

திரிணமூலை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன. இவற்றில் முக்கிய எதிர்க்கட்சியாகக் கருதப்பட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த நிலையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு 2 இடங்களே கிடைத்துள்ளன. சுயேச்சை உள்ளிட்ட இதர கட்சிகள் 3 இடங்களைப் பெற்றுள்ளன.

கடந்த 2015-ல் நடைபெற்ற நகரசபை தேர்தலில் திரிணமூல் 114, பாஜக 7, இடதுசாரி 15, காங்கிரஸ் 5, இதரக் கட்சியினர் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

எங்கள் கட்சி தேசிய அரசியலில் நுழையும் வாசல்களை இந்த வெற்றி திறந்துள்ளது...

இந்த வெற்றி அறிவிப்புக்குப் பின் முதல்வர் மம்தா, அருகிலுள்ள மாநிலமான அசாமின் கவுகாத்தியிலுள்ள புகழ்பெற்ற காமக்யா கோயிலுக்குச் சென்றார். இங்கு தரிசனம் செய்து திரும்பியவரிடம், நகரசபை தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மம்தா, ‘‘எங்கள் கட்சி தேசிய அரசியலில் நுழையும் வாசல்களை இந்த வெற்றி திறந்துள்ளது. ஏனெனில், எங்களை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என அனைவரும் தேசிய எதிர்க்கட்சிகள். இதில் பாஜக சுத்தமாக பொதுமக்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது. இடதுசாரிகளை பொதுமக்கள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இவ்விரண்டு கட்சிகளுக்கும் இடையே சிக்கி காங்கிரஸ் முழுவதுமாக நசுங்கி விட்டது” எனத் தெரிவித்தார்.

கடந்த 2015 நகரசபை தேர்தலில் பெற்றதை விட இந்தமுறை 21 சதவீதம் கூடுதலான வாக்குகளை திரிணமூல் காங்கிரஸ் பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை விடவும் இந்த நகரசபை தேர்தலில், கூடுதலாக 23 சதவீத வாக்குகளை திரிணமூல் காங்கிரஸ் பெற்றுள்ளது.

இந்நிலையில், மற்ற மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களிலும் போட்டியிட மம்தா தீவிரம்காட்டி வருகிறார். ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் கால்பதித்துள்ள மம்தாவின் கட்சி, அடுத்து நடைபெறவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், கோவா தேர்தலில் அதிக தீவிரம்காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE