முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துக்கு வருமான வரம்பு உயர்வு

By காமதேனு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனாளியாக, குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் அரசு, தனியார் மருத்துவமனைகள் வாயிலாக கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு. ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

‘முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் 23.7.2009 அன்று தொடங்கப்பட்டது, இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைபெற காப்பீடு செய்யப்பட்டது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11.1.2012 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இந்தக் காப்பீட்டு திட்டத்துடன், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ என்ற திட்டத்தை ஒருங்கிணைத்து, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கும் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் கருத்துருக்களின் அடிப்படையில், 11.1.2022 முதல் புதிதாக நீட்டிக்கப்படவுள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை, ரூ.1,20,000 ஆக உயர்த்தலாம் என ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE