கொலையுண்ட மரங்களுக்கு அஞ்சலி

By கரு.முத்து

புதுக்கோட்டை நகரில் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் இருந்த மரங்கள் தனி நபர்களால் வெட்டப்பட்டதைக் கண்டித்து, ‘கொலையுண்ட மரங்களுக்கு அஞ்சலி’ செலுத்தி வித்தியாசமான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள் மரம் நண்பர்கள் அமைப்பினர்.

கஜா புயலால் புதுக்கோட்டை நகரில் இருந்த பழமையான மரங்கள் பெரும்பாலானவை விழுந்து விட்டன. அதனால் அதிகமான மரங்கள் இருந்த புதுக்கோட்டை நகரம் அதிகம் மரங்கள் இன்றி காணப்பட்டது. இதையடுத்து, மரம் நண்பர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நகர் முழுவதும் மரங்களை வைக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் நகரில் தற்போது மரங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன.

சமீப காலத்தில் புதுக்கோட்டை நகரில், கல்லூரி தொடங்கி கடைவீதி வரையிலும் 20-க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதைக் கண்டிக்கும் வகையிலும், மாவட்ட நிர்வாகத்தையும், நகராட்சி நிர்வாகத்தையும் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ‘புதுக்கோட்டை மரம் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் ஊர்வலமாகச் சென்று நகரின் 3 இடங்களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர் அஞ்சலியும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொலையுண்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவ்யநாதன், "உலகம் வெப்பமயமாதலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மரம் வளர்ப்பது அவசியமான ஒன்று. இதை உணர்ந்தே நான் நகர்மன்ற தலைவராக இருந்தபோது மரம் வளர்ப்பதை ஒரு இயக்கமாகச் செய்தேன். அப்படி வளர்க்கப்பட்ட மரங்கள் இப்போது வெட்டப் படுவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. கண்ணீர் வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதுபோன்று மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க உடனடியாக நடிவடிக்கை வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் எட்வின், பேரா. விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன், இணைச் செயலர் மூர்த்தி, இயற்கை விவசாயி கோ.ச.தனபதி, தென்றல் அமைப்பு ஓவியா, திருநங்கைகள் தலைவி சிவானி மற்றும் ஏராளமான இயற்கை விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த வித்தியாசமான அஞ்சலியைப் பார்த்த பிறகாவது, மனசாட்சி இன்றி மரத்தை வெட்டும் மாபாதகர்கள் தங்கள் செயலை மாற்றிக் கொள்வார்களா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE