பத்தாண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் உடன்பிறப்புகளின் கனவை ஈடேற்றும் விதமாய், தமிழகத்தில் திமுக ஆட்சி திடமாய் அமர்ந்திருக்கிறது. அப்படி ஆட்சிக்கு வந்தது முதலே அழகிரியும் ஸ்டாலினும் மீண்டும் கைகோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் இந்த உடன்பிறப்புகளின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு என்பதில், சகோதரர்கள் இணையவேண்டும் என்பதற்கு இணையாக, சேர்ந்துவிடுவார்களோ என்ற எதிர்மறை தவிப்பும் அடங்கும்.
கருணாநிதியின் வாரிசுகளான அழகிரி-ஸ்டாலின் இருவரும், அரசியல் வாரிசுகளாகவும் வளர்ந்தனர். திமுகவைப் பொறுத்தவரை தலைவரின் வாரிசு என்பதற்கு அப்பாலும் தவிர்க்க முடியாத சக்திகளாக இருவரின் அரசியல் வளர்ச்சியும் அமைந்திருந்தது. அதேபோல, ஒரே உறையின் இரண்டு வாள்களுக்கே உரிய, நடைமுறை விநோதங்களும் உரசல்களும் எழுந்தன. கலைஞரின் நிழலில் வளர்ந்த மு.க.ஸ்டாலின் கடைசியில், ஏகோபித்த ஆதரவுடன் திமுகவின் தலைவராகி, முதல்வருமாகி உள்ளார். கசப்போ, சலிப்போ மு.க.அழகிரி மவுனம் காத்து வருகிறார்.
சகோதர யுத்தத்தின் உச்சியில், கருணாநிதி ஆக்டிவாக இருந்தபோதே கட்சியிலிருந்து அழகிரிக்கு கட்டம் கட்டினார்கள். சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடிப்பது குறித்து அழகிரி அவநம்பிக்கை தெரிவித்திருந்தார். ’கலைஞர் திமுக’ என்று புதுக் கட்சியை ஆரம்பிப்பார், பாஜக அல்லது ரஜினி ஆதரவுடன் அரசியலில் தீவிரமாய் இறங்குவார் என்ற அழகிரி குறித்த எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றத்தில் முடிந்தது.
கடைசியில் திமுக வெற்றி பெற்றபோது, மதுரையிலிருந்தவாறே ஸ்டாலினை வாழ்த்தினார் அழகிரி. பதவியேற்பு விழாவுக்கு கரோனா பரவலை காரணம் காட்டி மகனை மட்டுமே சென்னைக்கு அனுப்பினார். துரை தயாநிதியை, உதயநிதி ஆரத்தழுவி வரவேற்றபோது பல உடன்பிறப்புகளுக்கு கண்கள் பனித்திருக்கும். கரோனா ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றபோது, அழகிரி வீட்டுக்கு போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டது. ஸ்டாலின் வரப்போகிறார் என்று பட்டாசு எல்லாம் வாங்கி வைத்தார்கள். எதிர்பார்ப்புகள் எல்லாம் நமுத்துப்போனதுதான் மிச்சம்.
அதன் பிறகான கலைஞர் பிறந்தநாளை கட்சியினர் குறுகுறுப்போடு எதிர்பார்த்தார்கள். ஆனால் மெரீனா நினைவிடம் முதல் கோபாலபுரம் இல்லம் வரை அழகிரிக்கு முன்பாக அந்த இடத்தை ஸ்டாலின் காலி செய்யுமாறு முதல்வரின் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. தொடர்ந்து, தமிழரசுவின் திருமண மண்டபம் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பு விழாவில் இருவரும் பங்கேற்றனர். ஆனால் சந்திப்பு நிகழவில்லை. இன்னும், அழகிரி மற்றும் செல்வி வீட்டு விசேஷங்கள் பலவற்றிலும் சகோதரர்கள் சந்திப்பு நிகழும் என்ற ஹேஷ்யங்கள் எழுந்தடங்கின.
இவற்றின் தொடர்ச்சியாக, கோவையில் இன்று(டிச.21) ஒரே நிகழ்வில் பங்கேற்றபோதும், ஒரே இடத்தில் உலவியபோதும் சகோதரர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதைத் தவிர்த்துள்ளனர். மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின், விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். வடவள்ளியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலட்சுமியின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அங்கே வந்திருந்த அழகிரி, அஞ்சலி செலுத்திவிட்டு அதே வளாகத்தில்தான் இருந்தார். அண்ணனும், தம்பியும் ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தனர். ஆனால் இருவருக்கும் இடையே நேருக்குநேர் சந்திப்போ, அளவளாவலோ நிகழவில்லை. சகோதரர்களின் இந்தக் கூடுகையும், தவிர்ப்பும் மற்றுமொரு முறை திமுகவினர் மத்தியில் பேச்சாக மாறியுள்ளது.
இருவரும் இணையும் சாத்தியங்கள் மட்டுமன்றி, அழகிரி மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு திரும்புவாரா என்ற மதுரையை மையமாகக் கொண்ட எதிர்பார்ப்புகளும் அவற்றில் அதிகம். அண்ணன் தம்பி நெருக்கத்தை அழகிரியின் ஆதரவாளர்களில் பலர் அந்த அளவுக்கு எதிர்பார்த்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், ஆளும்கட்சிக்கான எந்த அடையாளமும் இன்றி முடங்கி கிடப்பதன் வேதனை அவர்களுக்குத்தான் தெரியும்.
அழகிரி-ஸ்டாலின் இடையிலான உறவு எப்படி இருக்கிறது; இருவருக்கும் பொதுவான குடும்ப நண்பர்கள், உறவுகள் இவற்றை எப்படிக் கையாள்கிறார்கள் என்று எந்தத் தகவலும் கசிந்தபாடில்லை. சொத்துகள் தொடர்பான விவகாரங்களிலும் புகைச்சல் நிலவி வருவதாகவே, அழகிரி தரப்பிலிருந்து முணுமுணுக்கிறார்கள். இருக்கும் கசப்புகள் எப்போது கழியும், சகோதர ஊடல் எப்போது மறையும் என்பது மதுரை உடன்பிறப்புகள் மத்தியில் தீராத கேள்வியாக நிற்கிறது. இவற்றின் மத்தியில் அதிரடிகளுக்கு பெயர் போன அழகிரி எப்படி அமைதியாக இருக்கிறார் என்பதும் அந்தக் கேள்விகளில் ஒன்று.
இருவருக்கும் இடையிலான ஈகோவை யார் முதலில் உடைப்பார்கள் என்பது அதில் அடுத்த கேள்வி. ஸ்டாலின் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களைப் பொறுத்தவரை தற்போதைய நிலைமை தொடரவே விரும்புகிறார்கள். அழகிரிக்கு மீண்டும் சலங்கை கட்டினால் அவரை சமாளிப்பது என்பது, இதர கட்சி, ஆட்சி சவால்களை விட ஸ்டாலினுக்கு கடினமாகிவிடும் என்கிறார்கள். அழகிரியைப் பொறுத்தவரை, கட்சிக்கு சிக்கல் வரும்போதுதான் அண்ணன் அழகிரியின் அருமை புரியும் என்கிறார்கள். தனக்கான ராஜபாட்டையில் பீடு நடைபோடும் ஸ்டாலினுக்கு இப்போதைக்கு அதற்கான தேவையும் இல்லை. முதல் பத்தியில் குறிப்பிட்டவாறு, எகிறும் எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவை, சகோதரர்கள் இணைந்துவிடுவார்களோ என்ற தவிப்பாகவே அமைந்திருப்பதும், இருதுருவங்களின் இடைவெளி அப்படியே நீடிக்கவும் காரணமாகிறது.