சொந்தத் தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற, அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ‘கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுகா, கோதவாடி பஞ்சாயத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளம் 50 ஆண்டுகளாக புதர் மண்டி, இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது.
தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பொள்ளாச்சி ஜெயராமன் முயற்சியால், 2017-2018-ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், கோதவாடி குளம் தூர்வார ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராம மக்களின் பங்களிப்புடனும் குளம் மற்றும் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டதால் மழைநீர் வரத்துக்கால்வாய் மூலம் குளத்தை வந்தடைந்தது. கடந்த வாரம் பெய்த தொடர்மழையின் காரணமாக, கோதவாடி குளம் நேற்று இரவு(டிச.20) நிரம்பியதால் அக்கிராம மக்கள் மகிழ்வடைந்தனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்குளம் நிரம்பியதைத் தொடர்ந்து, குளக்கரை அம்மன் கோயிலில் 101 பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்துள்ளனர்.
அவரும் மக்களின் அழைப்பை ஏற்று இன்று(டிச.21) காலை 11 மணிக்கு கோதவாடி கிராமத்துக்குச் சென்றுள்ளார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அப்பகுதி திமுக ஒன்றியச் செயலாளர் 40 பேருடன் வந்து பொள்ளாச்சி ஜெயராமன் மீதும், அங்கிருந்த பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதை, அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததோடு, அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகளை பறிமுதல் செய்துள்ளனர். காவல் துறையினரின் முன்னிலையில் எம்எல்ஏவே தாக்கப்படுகிறார் என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
இந்த விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, திமுகவினரால் சாமான்ய மக்கள், அதிகாரிகள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே பல இடங்களில் ஆளும் திமுகவினரால் தாக்குதலுக்குள்ளாகின்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் அவரது தொகுதியிலேயே தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். ஆளும்கட்சியினரின் இந்த வன்முறையை கடுமையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுத்துநிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிமுக முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். பொள்ளாச்சி ஜெயராமன் மீதும், பொதுமக்கள் மற்றும் மகளிர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.