மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல, சொல்லையும், பொருளையும் புரிந்துகொண்டு வேகமாக எழுதிக்கொடுத்தவர் விநாயகர் என்பார்கள். அந்தப் புராணக் கதை உண்மையோ இல்லையோ, ஆனால் ‘கலைஞரின் எழுத்துப் பிள்ளையார்’ என்று சண்முகநாதனைச் சொல்லலாம்.
கலைஞரின் பேச்சு, அறிக்கை, பேட்டி எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து குறிப்பெடுத்து, பத்திரிகையாளர்களுக்கு முன்பே பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பும் அளவுக்கு வேகமும், விவேகமும் கொண்டவர் சண்முகநாதன். கலைஞரின் தன் வரலாறான 'நெஞ்சுக்கு நீதி', 'முரசொலி' கடிதங்களில் பெரும்பாலானவற்றை எழுத்தாக்கியவர் இவரே.
அதிகப் போட்டிகள், அதிக ரன், அதிக செஞ்சுரி என்று கிரிக்கெட்டில் டெண்டுல்கர் படைத்த சாதனைகள்கூட அவரது கண் முன்னாலேயே முறியடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், கலைஞர் கருணாநிதி அரசியல்வாதியாக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, சினிமாக்காரராக, முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக, சட்டப்பேரவவை உறுப்பினராக ஒவ்வொன்றிலும் படைத்திருக்கும் சாதனைகளில் பல இன்னமும் முறியடிக்கப்படவில்லை. அவரின் சாதனைகளை உற்று நோக்குபவர்களுக்கு, ஒரு மனிதரால் எப்படி தன்னுடைய ஆயுளுக்குள் இவ்வளவு வேலைகளைச் செய்துமுடிக்க முடிந்தது என்ற வியப்பு ஏற்படும். அப்படியான நேரங்களில் சண்முகநாதனையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
எப்படி அறிமுகமானார்?
இமயமலையில் ஆண்டுக்கணக்கில் தவமிருந்த வியாசர், தன் மனதில் தோன்றிய பாரதக் கதையை எழுத விநாயகரால்தான் முடியும் என்று அவரை நோக்கியும் தவமிருந்ததாகச் சொல்வார்கள் ஆன்மிகவாதிகள். அப்படி கலைஞர் தவமிருந்து பெற்ற உதவியாளர்தான் சண்முகநாதன்.
கலைஞர் பிறந்த அதே திருவாரூர் வட்டாரத்தில் இருக்கிற திருக்கண்ணமங்கையில் பிறந்தவர்தான் சண்முகநாதன். சாதாரண நாதஸ்வர வித்வான் கோதண்டபாணியின் 5 பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்து, பள்ளிக்கட்டணம்கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டு படித்தவர், கூடவே டைப் ரைட்டிங்கும் படித்தார். அது அவரை 5 முறை முதல்வராக இருந்த கலைஞரின் நிரந்தர உதவியாளராக்கும் என்று கனவுகூட கண்டதில்லை. அந்தத் தகுதியை வைத்து திருவாரூர் கூட்டுறவு வங்கியில், எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தவர், எப்படியாவது நிரந்தர வேலைக்குப் போய்விட வேண்டும் என்று அரசு பணிக்கான தேர்வுகளையும் எழுதிக்கொண்டிருந்தார். அதில் தேர்வானதும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது சண்முகநாதனுக்கு.
மாதச் சம்பளம் ரூ.135. குடும்பத்துக்கு மூத்தப் பிள்ளை என்பதால், அதில் ரூ.75-ஐ வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதி 65 ரூபாயில்தான் ஒரு மாதத்துக்கான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அத்தனை செலவுகளையும் சமாளிக்க வேண்டிய நிலை. சம்பளம் பத்தாமல், விருதுநகர் முருகவேல் நாடாரின் என்பிஎஸ் பட்டணம் பொடிக் கம்பெனியில் அதிகாலை 5 முதல் 8 மணி வரையில் பகுதிநேர வேலை பார்த்து ரூ.5 சம்பாதித்திருக்கிறார் சண்முகநாதன்.
கருணாநிதி பேச முடியாமல் போனநிலையிலும், தினமும் கோபாலபுரம் இல்லம் சென்றதுடன், அவரிடம் இருந்து அழைப்பு வராதா? என்று 'இன்டர்காம் போன்' அருகிலேயே உட்கார்ந்திருந்த சண்முகநாதனுக்கு, இப்போது கருணாநிதிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது போலும்... போய்விட்டார்.
இந்த நேரத்தில் காவல் துறையில் ‘போலீஸ் ரிப்போர்ட்டர்’ வேலை காலியிருப்பதை அறிந்து, வேகவேகமாக தமிழ் டைப் ரைட்டிங் படித்து அதைப் பிடித்தார் சண்முகநாதன்.
புதுக்கோட்டையில், திமுக பொதுக்கூட்டத்துக்குப் போலீஸ் ரிப்போர்ட்டராக சண்முகநாதனை அனுப்பிவைத்தது காவல் துறை. அங்கே கருணாநிதி பேசிய பேச்சை வார்த்தை மாறாமல் அப்படியே குறிப்பெடுத்து, தட்டச்சு செய்து உயரதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார் சண்முகநாதன். அது 'டேப் ரிக்கார்டர்' அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம்.
அப்புறம் நடந்ததை கருணாநிதியே ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார். "எனது புதுக்கோட்டை பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப் போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். வியந்து போனேன். என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகியிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'அவை நாங்கள் பேசியதுதான்' என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது. யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாகப் படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முகநாதன் பற்றி எனக்குத் தெரியவந்தது. நான் அமைச்சரானபோது, பி.ஏ-வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார்" என்று கருணாநிதி பேசியிருக்கிறார்.
இதுபற்றி 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ பேட்டியில் விரிவாகச் சொல்லியிருந்தார் சண்முகநாதன்.
"ஒருநாள் ‘கல்கி’ மேலாளர், உன்னைய பொதுப்பணித் துறை அமைச்சர் (கருணாநிதி) பார்க்கணும்னு சொன்னாருப்பா என்று சொன்னார். நான் பயந்துபோய்விட்டேன். அந்தப் பழைய வழக்கு விஷயம் தொடர்பாக ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று பயந்துகொண்டே, கோபாலபுரம் வீட்டில் போய் அவரைப் பார்த்தேன். 'எனக்குப் பி.ஏ-வா வந்திடுறீயாய்யா?' என்று நேரடியாகவேக் கேட்டார். 'இல்லையா, நான் இப்ப இருக்கிறது 240 ரூபா அடிப்படைச் சம்பளத்துல. உங்க பி.ஏ-ன்னா 140 ரூபாய்தான் அடிப்படைச் சம்பளம். வேண்டாம்யா' என்றேன். 'சரி, அப்படின்னா போ' என்று சொல்லிவிட்டார் கலைஞர். நானும் வந்துட்டேன்.
ஒருநாள் திருவாரூரில் உள்ள தன்னுடைய தாய் சமாதிக்கு வந்த கலைஞர், திருத்துறைப்பூண்டியில் என்னுடைய அப்பா கோதண்டபாணியைப் பார்த்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு அப்பா, 'பணம் பெருசில்லைடா தம்பி. மினிஸ்டர்கிட்ட பி.ஏ-ன்னா மதிப்பு, கௌரவம்' என்று எனக்குக் கடிதம் எழுதினார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு மறுபடியும் கோபாலபுரம் வீட்டுக்குப் போனேன். அதற்குள்ளாக கலைஞரின் 2 பி.ஏ-வும் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். 'நீ ஒரு வாரம் சட்டசபைக்குப் போய், சபாநாயகர் ஆதித்தனார்கிட்ட பி.ஏ-வா சேர்ந்திடு. ஒரு பி.ஏ-வை அனுப்பிட்டு உன்னையச் சேர்த்துக்கிறேன்' என்றார். நான் ஆதித்தனாரைச் சந்திக்கத் திருநெல்வேலிக்குப் போயிருந்தேன். நல்ல கூட்டம். மணிக்கணக்காக ஆனதால் கோபித்துக்கொண்டு திரும்பிவந்துவிட்டேன். ஆனாலும் கலைஞர் விடவில்லை. என்னை சட்டசபை ரிப்போர்ட்டராகச் சேரச் சொன்னார். அப்படிச் சேர்ந்துவிட்டால், நாம் கூப்பிட்டுக்கொள்ளலாம் என்பது அவரது ஆசை. பெரிய போட்டிக்கு நடுவே, என்னுடைய சுருக்கெழுத்து, தட்டச்சுத் திறமையால் அந்தப் பணி கிடைத்தது. 1 வருடம் நான் அங்கே பணிபுரிந்தபோது, அறிஞர் அண்ணாதான் முதல்வர். அவரது மறைவுக்குப் பிறகு 10.2.1969-ல் தலைவர் முதல்வரானார். நானோ என்னுடைய தங்கையின் திருமணம் என்று ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். 16-ம் தேதி ஒரு தந்தி வந்தது - ‘லீவு கேன்சல். ஜாயின் சீப் மினிஸ்டர் ஆபீஸ் அஸ் பி.ஏ.’ என்று. கலைஞரிடம் பி.ஏ-வாகச் சேர்ந்துவிட்டாலும்கூட, பழைய வேலையில எனக்கு அடிப்படைச் சம்பளம் 250 ரூபா. இங்கே குறையுதே என்ற பாட்டை விடாமல் பாடினேன். என்னையும் சேர்த்து அத்தனை பேருக்கும் சீனியர் பி.ஏ-வாகப் புரமோஷன் கொடுத்தார் கலைஞர். அவரிடம் நான் உதவியாளராகச் சேர்ந்தது 16.2.1969-ல். அவர் என்னை அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினார். அவரின் அணுக்கத் தொண்டனாகவே மாறிவிட்டேன். 1976-ல் ஆட்சி மாறியதும் எல்லா பி.ஏ-வும் அதிமுக அமைச்சர்கள் பக்கம் போய்விட்டார்கள். நான் மட்டும் தொடர்ந்து கோபாலபுரம் வீட்டிற்கே போனேன். அவர் தன்னுடைய அறைக்குக் கூப்பிட்டு, அப்படின்னா நீ அரசாங்க வேலையை ரிசைன் பண்ணிடுப்பா என்றார். அங்கிருந்த முரசொலி மாறன், பாவம், மூளைக்காரப்பய. இவன் வயசுக்கு செகரட்ரி வரைக்கும் வரலாம் மாமா என்று சொன்னார். இருந்தாலும் கலைஞர் என்மீது காட்டிய அன்பால் அரசுப் பணியை விட்டேன்" என்று அந்தப் பேட்டியில் சண்முகநாதன் பதிவுசெய்திருந்தார்.
50 ஆண்டு கால உதவியாளர்
கருணாநிதியின் உதவியாளராக 50 ஆண்டுகள் பணியாற்றிய சண்முகநாதன், அதில் சில ஆண்டுகள் சம்பளமே வாங்கியதில்லை. சில நேரங்களில் கருணாநிதி இவரைத் திட்டிவிடுவார். இவரும் கோபித்துக்கொண்டு போய்விடுவார். எல்லாம் சில நாட்கள்தான். இவரைப் பார்க்காமல் அவராலும், அவரைப் பார்க்காமல் இவராலும் இருக்கவே முடியாது. வழக்கம்போல கோபாலபுரம் வீட்டுக்கு வந்துவிடுவார் சண்முகநாதன்.
கருணாநிதி பேச முடியாமல் போன நிலையிலும், தினமும் கோபாலபுரம் இல்லம் சென்றதுடன், அவரிடம் இருந்து அழைப்பு வராதா? என்று 'இன்டர்காம் போன்' அருகிலேயே உட்கார்ந்திருந்த சண்முகநாதனுக்கு, இப்போது கருணாநிதிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது போலும்... போய்விட்டார்.
மாப்பிள்ளைத் தோழனின் இரங்கல்
சண்முகநாதனுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்ததே கலைஞர்தான். இதுகுறித்தும் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' பேட்டியில் சொல்லியிருந்தார் சண்முகநாதன்.
"நான் பொண்ணையும் பார்த்ததில்லை, ஒண்ணையும் பார்த்ததில்லை. தலைவர் குடும்பத்துடன் காரில் வந்தபோது, அடுத்த வாரம் இந்நேரம் சண்முகநாதன் பொண்டாட்டியோட இருப்பான்னு தலைவர் போற போக்குல சொன்னாரு. உடனே நான் சின்னம்மா(ராஜாத்தி அம்மாள்)கிட்ட போய், ‘தலைவர் என்னமோ சொன்னாரே என்னம்மா?’ன்னு கேட்டேன். ‘உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா சண்முகநாதன்? வர்ற செப்டம்பர் 6-ம் தேதி உங்களுக்குக் கல்யாணம். அதுவும் கலைவாணர் அரங்கத்துல’ என்று சொன்னார். கல்யாணத்தன்று சின்னம்மா தன்னுடைய நகைகளையே அணிவித்து என்னுடைய மனைவியை அலங்கரித்திருந்தார். தன்வீட்டுக் கல்யாணம் போல நடத்திக்காட்டினார் கலைஞர். அழகிரி, ஸ்டாலினை எல்லாம் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். அவர்கள் என்னை மூத்த சகோதரனாகத்தான் பாவித்தார்கள். அவ்வப்போது கேலியும் செய்வார்கள்" என்று பேட்டியில் சொல்லியிருந்தார் சண்முகநாதன்.
இன்று தமிழக முதல்வரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலும் இதைச் சொல்லியிருக்கிறார். "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆரம்பிக்கும் அந்த இரங்கல் செய்தியில், சண்முகநாதன் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக தானிருந்தது, எந்த மேடைப்பேச்சாக இருந்தாலும் சரி சண்முகநாதனிடம் பேசி, பேச்சு நன்றாக இருந்ததா என்று அவருடைய கருத்தைக் கேட்பது என்று எல்லாவற்றையும் நினைவு கூர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
சண்முகநாதனின் மறைவு, கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமல்ல தி.மு.க தொண்டர்களுக்கும் பேரிழப்புதான்!