காங்கிரஸிடம் இருந்து திமுகவைப் பிரிக்க நினைப்பவர்கள் பாஜகவின் காண்ட்ராக்ட் லேபர்ஸ்

By கே.கே.மகேஷ்

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி சார்ந்து அதிகம் பேசுபவர் பீட்டர் அல்போன்ஸ். அகில இந்தியப் பார்வையுடன் பிரச்சினைகளை அணுகுபவருமான அவர் 'காமதேனு'வுக்காக அளித்த பேட்டி...

ஆர்ப்பாட்டம், போராட்டம், அரசுக்கு எதிரான கருத்து என்று தமிழக பாஜக சுறுசுறுப்பாக இயங்குகிறது. அடுத்து ஆட்சிக்கு வர ஆசைப்படும் காங்கிரஸிடம் அப்படியான சுறுசுறுப்பு இல்லையே, ஏன்?

எந்தவிதமான விதிமுறைகளுக்கும் உட்பட்டு அரசியல் நடத்துகிற கட்சியல்ல பாஜக. பாஜகவின் அரசியல் விளையாட்டில் கோல் போஸ்ட்டும் கிடையாது, பெனால்டியும் கிடையாது, பவுலும் கிடையாது. ஏன் அம்பயரும் கிடையாது. அப்படியொரு ஆட்டத்தை அவர்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக எல்லோரும் அப்படி ஆட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஜனநாயகத்துக்கே நெருக்கடியை உருவாக்கிவிடும்.

ஒரு கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருப்பது, அந்த கூட்டணியிலேயே 4-வது, 5-வது கட்சியாக இருந்துகொண்டு தமிழ்நாட்டிலேயே நாங்கள்தான் பெரிய கட்சி என்று பேசுவது, ஒட்டிக்கொள்ள இடம் தந்த கட்சியையே அழிக்க நினைப்பது என்பது போன்ற வரைமுறையற்ற அரசியல் ஆட்டத்தையும், பேச்சையும் பொறுப்பான அரசியல் கட்சியான காங்கிரஸால் செய்ய முடியாது. எங்களுக்கென்று சில தேசிய கடமைகளும், மாநிலம் சார்ந்த கடமைகளும் இருக்கின்றன.

மதவாத அரசியலுக்கு விலைபோகாமல், பாசிச நிர்பந்த அரசியலுக்குப் பயப்படாமல், மத மற்றும் சமூக நல்லிணக்க சமூகத்தை உருவாக்கி, சமூக நீதியை லட்சியமாகக்கொண்டு செயல்படுகிற திமுக அரசுக்குத் துணைநிற்க வேண்டிய கடமை காங்கிரசுக்கு இருக்கிறது. பாஜகவைப் போல இந்தியாவிலேயே ஒரே கட்சி பாஜகதான், ஒரே தலைவர் மோடிதான் என்றெல்லாம் காங்கிரசும் சொல்லாது. எனவே, பாஜகவைப் போல காங்கிரஸ் இல்லையே என்று சொல்வது எங்களுக்குப் பெருமைதான்.

மத்தியில் அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. ஆனால், அதன் செயல்பாட்டைப் பார்த்தால், அந்த நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கே இல்லையோ என்று தோன்றுகிறதே?

ஊடகச் செய்திகளை மட்டும் கவனித்துவிட்டு, நீங்கள் கேட்கிற கேள்வி இது. இன்று ஜெய்ப்பூரில் மிகப்பெரிய பேரணியை நடத்தியிருக்கிறது காங்கிரஸ். நாட்டில் நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் ஆளும் பாஜகவைத் தோற்கடித்திருக்கிறது காங்கிரஸ். உத்தராகண்ட் போன்ற மாநிலத்தில் பாஜக மிகப்பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற நாடாளுமன்றத் தொகுதியை, இப்போது காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த எழுச்சியை மட்டுமல்ல, பொதுவாக பாஜகவுக்கு எதிராக, அவர்களுடைய சித்தாந்தத்துக்கு எதிராக, அவர்களது ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக எந்தக் குரல் எழுந்தாலும் அந்தக் குரலைப் பற்றிப் பேசுவதில்லை என்று இந்திய ஊடகங்கள் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டனவோ என்று தோன்றுகிறது.

மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்றது, திட்டமிட்ட படுகொலை என்று சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கை தந்திருக்கிறது. அந்த வழக்கில் அமைச்சரின் பெயரில் உள்ள காரில் இருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரமாக காருக்குள் காலி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. நாட்டின் சட்டம் - ஒழுங்குக்குப் பொறுப்பான உள்துறை இணை அமைச்சரின் மகன் செய்த இந்த வெறியாட்டத்தைக் கண்டித்து, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எத்தனை பத்திரிகைகள் இங்கே தலையங்கம் எழுதுகின்றன? இதேநிலைதான் மன்மோகன் சிங் காலத்தில் இருந்ததா? ரயில்வே அமைச்சரின் மைத்துனரிடம் போய் ரயில்வே வேலைக்காக ஒருவர் சிபாரிசு கேட்டதற்காக, அந்த ரயில்வே மந்திரியையே ராஜினாமா செய்யச் சொன்னோம்.

அன்று சட்ட அமைச்சராக இருந்த அஜய்குமார், அட்டர்னி ஜெனரலிடம் ஒரு வழக்கின் விசாரணை எப்படி நடக்கிறது என்று விசாரித்ததற்காக, அவரை ராஜினாமா செய்யச் சொன்னோம். இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் சட்ட - ஒழுங்குக்கும் பொறுப்பான அமைச்சரே, கலவரத்துக்குக் காரணமாகியிருக்கிறார். அவருடைய வாகனத்தையே பயன்படுத்தி, அவரது மகனே நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அது சரியென்று நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எந்த ஊடகமும் பேசத் தயாராக இல்லை.

நேருவில் தொடங்கி மன்மோகன் சிங் வரை இதுவரையில் சுமார் 12 பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். நேருவைத் தவிர மற்ற எல்லோருமே இறை நம்பிக்கையாளர்கள்தான். எல்லோருமே கோயிலுக்குப் போயிருக்கிறார்கள், பூஜை செய்திருக்கிறார்கள். யாராவது தன்னைச் சுற்றி பத்து இருபது கேமேராக்களை வைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனார்களா, அதைப் பெரிய சாதனையாக ஊடகங்களில் காட்ட வைத்தார்களா? ஆனால், மோடி கோயிலுக்குப் போனால் மட்டும், ஒரு பிரதமரின் முக்கியமான வேலையே இதுதான் என்பதைப்போல 24 மணி நேரச் செய்திச் சேனல்கள் நேரடி ஒளிபரப்புச் செய்கிறதே, ஏன்?

இப்படி வீண் விளம்பர, சுயதம்பட்ட செய்திகளே ஊடகங்களின் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்போது, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, ஊடகங்களில் எங்கே இடம் இருக்கும்? இதுபோதாது என்று காங்கிரஸ் வலுவிழந்துவிட்டது, ராகுல் காந்தி திறமையற்றவர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிற பிரச்சாரத்தைச் செய்வதற்காகவே பெரிய அளவில் முதலீடுகள் செய்திருக்கிறது பாஜக.

இவர்தான் எங்கள் தலைவர், இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சி தயங்குவதைப் பற்றியும் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்...

யார் பிரதமர் வேட்பாளர் என்று கேள்வி எழுப்புவதையே, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்கான முயற்சியாகத்தான் பார்க்கிறேன். இப்போது அந்தக் கேள்வியும் தேவையில்லை; அந்தக் கேள்விக்கான பதிலும் தேவையில்லை. அந்தக் கட்டமே இன்னும் வரவில்லை. காங்கிரஸின் தலைவர் அன்னை சோனியா காந்திதான். அப்படிச் சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் ஒன்றுபட்ட நெல்லை, குமரி மாவட்டங்களில்கூட, கட்சி பலவீனமாகிக் கொண்டிருப்பதை அந்த மாவட்டத்தில் இருந்து வந்த நீங்களாவது அறிகிறீர்களா?

காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் வலுப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற தலையாய கடமை என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கிற மதச்சார்பற்ற, சமூக நீதியில் நம்பிக்கைகொண்ட, மாநில உரிமைகள் பேசுகிற கட்சிகளையும் அதன் பின்னால் இருக்கிற வாக்குகளையும் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது. தமிழ்நாட்டை மட்டும்தான் வகுப்புவாத அரசியல் எனும் விஷநாக்கு இன்னும் தீண்டவில்லை. எப்படியாவது இங்கேயும் புகுந்துவிட வேண்டும் என்று பாஜக எனும் விஷநாகம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்புள்ள காங்கிரஸ், அதற்காகச் சின்னச் சின்ன தியாகங்களை செய்ய நேரிடலாம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக காங்கிரஸ் கட்சி அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சின்னச்சின்னத் தியாகங்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது?

ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றிபெறுவது, 2-வது இடத்துக்காவது வருவது என்பதைவிட, அங்கே பாஜகவின் சித்தாந்தத்தைத் தடுக்க வேண்டும் என்பதையே முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும். பாஜகவின் கிளையாகிவிட்ட அதிமுககூட எங்கேயும் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்று கருதிச் செயல்பட வேண்டும் என்கிறேன்.

எதிர்க்கட்சிகளை அணி திரட்டுகிறார் மம்தா. காங்கிரஸ் கட்சி இதை எப்படிப் பார்க்கிறது?

அகில இந்திய அரசியலில் 3-வது அணியை உருவாக்க நினைக்கிறவர்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸின் ஸ்லீப்பர் செல்கள்தான். 2014-ல் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், பாபா ராம்தேவ், கிரண்பேடி போன்றவர்கள் திடீரென்று ஒருநாள் முளைத்துவந்து ஊழலுக்கு எதிரான இயக்கம் என்று ஆரம்பித்தார்கள். இவர்கள் அத்தனை பேரும் அன்று நடத்தப்பட்ட நாடகத்துக்கு ஆர்எஸ்எஸ்சால் அமர்த்தப்பட்ட நடிகர்கள் என்பது பிறகுதான் தெரியவந்தது.

அதைப்போல இப்போது காங்கிரஸ் வலுவிழந்துவிட்டது, ராகுல் திறமையற்றவர்கள் என்று சொல்பவர்கள் எல்லோரும் அந்த அன்னா ஹசாரே நாடகக் கம்பெனியினர் செய்த அதே நாடகத்தை மீண்டும் வேறொரு தலைப்பில் அரங்கேற்ற வந்தவர்கள்தான். பாஜகவுக்கு மாற்றான அரசியல் கட்சிகள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமையை கேரளா மறுப்பதற்கு முக்கியக்காரணமாக இருப்பது கேரள காங்கிரசின் வலுவான குரல். தமிழக காங்கிரஸ் இதுபற்றி கேரள காங்கிரஸிடம் பேசினால் என்ன? குறைந்தபட்சம் கேரள எம்பி ராகுல்காந்தி வாயிலாகவாவது அழுத்தம் தரலாமே?

தமிழ்நாட்டின் நலனுக்கும், தமிழக விவசாயிகளின் நலனுக்கும் எது உகந்ததோ அதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அகில இந்திய காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், மாநிலப் பிரச்சினைகளில் அந்த மாநில காங்கிரஸ் கட்சி, மாநில நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் ஒருநாளும் தலையிட்டது கிடையாது. அது அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு இருக்கிற சுதந்திரம். கட்சியின் அடிப்படைக் கொள்கை சார்ந்த விஷயங்களில் இருந்து வழுவினால்தான், அகில இந்திய தலைமை தலையிடும்.

தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், திமுக அரசு சிறுபான்மையினரை குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒருவரைக்கூட விடுதலை செய்யவில்லை என்ற அதிருப்தி இருக்கிறதே?

தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை அவர் ஏழரைக் கோடி தமிழர்களையும், தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறார். அவர்களை மதம் சார்ந்த பின்புலத்துடனோ, சாதி அடையாளத்துடனோ அவர் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு செயல்முறை உருவாக்கப்பட்டு, எல்லோரையும் ஒரே அளவுகோலின் அடிப்படையில் விடுதலை செய்வதுதான் சட்டம். எனவே, இதை சாதி, மத கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

பாஜகவைவிட அதிகமாக திமுகவை விமர்சிக்கிறார் சீமான். காங்கிரசுடன் உறவு வைத்திருப்பதாலேயே அதிக தாக்குதலுக்கு உள்ளாகிறதே திமுக?

பாஜக அறம் சார்ந்த அரசியலில் ஈடுபடுவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அதன்படி, தமிழ்நாட்டில் பலவீனமான அரசியல் தலைவர்களையும், பலவீனமான அரசியல் கட்சிகளையும் அவர்கள் அடையாளம் கண்டு, அந்தத் தலைவர்களையும் கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக வாக்குகளைச் சிதறடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸிடம் இருந்து திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் பிரிக்க நினைப்பவர்கள் பாஜகவின் கையாட்கள், பாஜகவின் காண்ட்ராக்ட் லேபர்ஸ் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE