அண்ணா விளையாட்டு அரங்கை கபளீகரம் செய்யும் மாநகராட்சி?

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஆடம்பர வசதிக்காக, அருகில் இருக்கும் அரசுக்கு சொந்தமான அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் இடங்களையும் கபளீகரம் செய்வதாக விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அருகருகே இருக்கும் மைதானமும், மாநகராட்சி கட்டிடமும்

நகராட்சியாக இருந்த நாகர்கோவிலை கடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு, அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகில் இருந்த கலைவாணர் அரங்கத்தில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வானது. நகராட்சிக்கு சொந்தமான பழையக் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிடத்தில் மாநகராட்சியின் மேயர் சென்றுவர தனிப்பாதை, அதிகாரிகள், பொதுமக்கள் சென்றுவர தனித்தனியாக 3 பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதில் மேயர் செல்வதற்காக உருவாக்கப்படும் பாதைக்காக இந்தக் கட்டிடத்தை ஒட்டி இருக்கும், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் சில பகுதிகளை மாநகராட்சி கையகப்படுத்த முயல்கிறது. இது விளையாட்டு மைதானத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே சீர்கெடுத்துவிடும் எனவும், அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட விளையாட்டு அரங்கத்தின் உள்ளே வரமுடியாத சூழல் ஏற்படும் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெயின் ஷாஜி

இதுகுறித்து அண்ணா விளையாட்டு அரங்கத்தின் விளையாட்டு வீரர்கள் நலச்சங்க செயலாளர் ஜெயின் ஷாஜி காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ‘‘கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இந்த விளையாட்டு அரங்கம் திறந்துவைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரே விளையாட்டு அரங்கமும் இதுதான். இதில் பல குறைகள் இருந்தாலும் இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் பலரும் தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்துள்ளனர். இதேபோல் குமரி மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இந்த அரங்கில் தான் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளும் சுதந்திர தினம், குடியரசு தினமும் இந்த மைதானத்தில் தான் நடக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரங்கத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் வசதிகள் செய்ய வேண்டிய நேரத்தில், இருக்கும் இடத்தையும் மாநகராட்சிக் கட்டிடத்துக்காக கபளீகரம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

மாநகராட்சியின் தெற்குப்பகுதியில் தாராளமாக இருக்கும் இடம்

இந்த விளையாட்டு அரங்கத்திலேயே மாணவிகளுக்கான தங்கும் விடுதியுடன் கூடிய பயிற்சிப் பள்ளியும் உள்ளது. அதைத்தாண்டி அத்லெட்டிக், கால்பந்து, கைபந்துப் பயிற்சிக்கு வருவோர், தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வருவோர் என இந்த விளையாட்டு அரங்கத்தை ஆயிரக்கணக்காணோர் பயன்படுத்திவருகின்றனர். ஏற்கெனவே அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இடவசதி குறைவாக உள்ளது. மாநகராட்சி கட்டிடம் வர இருக்கும் பகுதிக்கும், அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கும் பொதுப்பாதை இருக்கிறது. விளையாட்டு அரங்கத்தின் கேலரிக்கு வெளியிலேயே 22 அடிக்கு விளையாட்டு அரங்கத்தின் இடம் இருக்கிறது. இந்த கேலரியின்(பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான படிக்கட்டு) வெளிப்பகுதியில் இது பொதுவாசல் வழிப்பாதை என்பதால், விளையாட்டு அரங்கத்தின் சார்பில் கடைகளும் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்கள். பொதுப்பாதையை மாநகராட்சி எடுத்துக்கொண்டு வேலை செய்துவருவதால், இந்தக் கடைகள் அனைத்தையும் காலி செய்துவிட்டார்கள். இதனால் அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு வந்த வருவாய் நின்றுபோய்விட்டது. இதனால், உள்ளே போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது’’ என்றார்.

சர்ச்சைக்குரிய இடம்

மேயருக்கு தனிப்பாதை அமைப்பதற்காகவே விளையாட்டு அரங்கத்துக்குச் செல்லும் பொதுப்பாதையை கபளீகரம் செய்வதாக குற்றச்சாட்டு கிளப்புகின்றனர். “பொதுவாகவே விளையாட்டு அரங்கத்துக்கு அவசரகால வழிப்பாதை கட்டாயமாகத் தேவை. அப்படி இருக்கும் ஒரு வாசலை அடைத்துவிடுவது ஏற்புடையதா?”’ எனக் கேள்வி எழுப்பும் ஜெயின் ஷாஜி தொடர்ந்து பேசினார்...

‘‘அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு இன்னொரு வாசலும் இருக்கிறது. அதில் படிக்கட்டுகள் இருக்கின்றன. விபத்து காலத்தில் ஆம்புலன்ஸோ, தீயணைப்பு வாகனமோ, விளையாட்டுப் போட்டிகளுக்கான தளவாடப் பொருட்களோ நேரடியாக மைதானத்துக்குள் வர சாத்தியம் இல்லை. மேயர், பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் ஒரே பாதை என்றாலோ அல்லது இருபாதைகளை அமைத்துக் கொண்டாலோ இதில் சிக்கல் இல்லை. 3 பாதைகளை மக்களின் வரிப்பணத்தில் இருந்து அமைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அதிலும் விளையாட்டு அரங்கத்தின் அவசரகால வாசல்பகுதியையே இதனால் இழக்க நேரிடும். கனரக வாகனம் செல்ல விளையாட்டு அரங்கத்துக்கு இனி புதுப்பாதை அமைத்தால் ஸ்டேடியத்தின் தன்மையே நிலைகுலைந்துவிடும். மாநகராட்சி கட்டிடத்தின் தென்பகுதியில் ஏராளமான இடம் இருக்கிறது. அவர்கள் கட்டிடத்தை தள்ளியே கட்டியிருக்கலாம். அவர்களது முன் திட்டமிடல் தோல்விக்கு மைதானத்தை பலிகொடுக்கிறார்கள்’’ என்கிறார்.

மூடப்பட்ட விளையாட்டு அரங்க கடைகள்

இதுகுறித்து மாநகராட்சி கட்டிடக் கட்டுமானப் பணியில் இருந்த அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘’விளையாட்டு வீரர்கள் இந்த புதிய பாதை கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது மாநகராட்சியின் கவனத்துக்கும் வந்தது. அகஸ்தீஸ்வரம் தாசில்தார் தலைமையில் மைதானத்தின் இடத்தை சர்வே செய்திருக்கிறார்கள். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன்படி பணிகள் செய்யப்படும்’’ என்கின்றனர்.

அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தை கபளீகரம் செய்யத் துடிக்கிறது மாநகராட்சிக் கட்டிடம்! ஆனால் அந்த அண்ணா அரங்கம் கட்ட, முந்தைய காலத்தில் நீராதாரமாக இருந்த கள்ளர் குளம் எனப்பட்ட இடம்தான் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது தனிக்கதை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE