நான் ராஜா இல்லை!

By கே.எம்.கபிலன்

”நான் மட்டும் ராஜாவா இருந்தா பரவாயில்ல, மந்திரிங்களும் இருக்காங்க, நான் ராஜா இல்லை. எனக்கு மேலயும் இருக்காங்க, கீழயும் இருக்காங்க. இது பாண்டிச்சேரி, இப்படித்தான் இருக்கும்” மழைக்கால நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று கேட்ட காரைக்கால் பொதுஜனத்துக்கு, புதுவை முதல்வர் ரங்கசாமி இப்படி பதிலளித்ததாக ஒரு ஆடியோ அண்மையில் வலைதளங்களில் வைரலானது.

ரங்கசாமியின் இந்த விரக்திப் பேச்சுக்கு என்ன காரணம்? புதுவைப் பக்கம் விசாரித்தோம்.

‘’அந்த அளவுக்கு மனம் நொந்து போயிருக்கிறார் ரங்கசாமி. அவரை இப்படிப் புலம்ப வைச்சிட்டாங்க. முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்குமே அந்தமாதிரியா ஆகிடுச்சு பிஜேபி கிட்ட சிக்கிக்கிட்ட அவரோட நிலைமை. அவரை சுதந்திரமா எதையும் செய்யவிடமாட்றாங்க. அவரு மக்களுக்கு நல்லது செஞ்சு நல்ல பேரு எடுக்கவிடாம பாஜக முட்டுக்கட்டைப் போடுது.

தீபாவளிக்கு 10 கிலோ அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் குடுக்குறதா சொன்னதையே, 3 வாரம் கழிச்சுத்தான் குடுக்க முடிஞ்சுது. இன்னும்கூட முழுசா கொடுத்து முடியல. இதுபோல தான், மழையால பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் தருவோம்னு ரங்கசாமி அறிவிச்சாரு. அதையும் ஆயிரம் கேள்வி கேட்டு தலைமைச் செயலாளர் ஆபீஸ்ல ஃபைலை பெண்டிங் வெச்சிருக்காங்க. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம் தருவோம்னு ரங்கசாமி சொன்னார். அதுக்கும் இன்னும் ஒப்புதல் கிடைக்கல.

தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கினாத்தான் இதையெல்லாம் கொடுக்க முடியும். அதுக்கான வேலைகள் நடக்கலைன்ற விரக்தியைத்தான் காரைக்கால்ல இருந்து போனில் பேசியவர்கிட்ட ஆதங்கமா வெளிப்படையா கொட்டிருக்காரு ரங்கசாமி” என்கிறார்கள் ரங்கசாமி தரப்பில்.

“முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அதற்கான அதிகாரத்தை முழுமையாகச் செலுத்தமுடியவில்லை, எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்ற ஆதங்கம் ரங்கசாமிக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அந்த ஆதங்கத்தைத்தான், ‘நான் மட்டும் ராஜாவா இருந்தா பரவாயில்லை, மந்திரிகளும் இருக்காங்க’ என்ற வார்த்தைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதன் மூலம் பாஜக தரப்பால், தான் சந்தித்து வரும் சங்கடங்களையும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் மாநில நிர்வாகிகள்

அனைத்துக்கும் முட்டுக்கட்டைப் போட்டு லாயக்கற்ற முதல்வர் என்ற முத்திரையை ரங்கசாமி மீது குத்த நினைக்கிறது பாஜக. இப்படிச் செய்து, ஆட்சி மாற்றம் தேவை என்ற மனநிலையை மக்களிடம் உருவாக்குவதே பாஜகவின் திட்டம். அப்படியே 6 சுயேச்சை எம்எல்ஏக்களையும் தங்கள் வசமாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் பாஜகவின் அடிமனதில் இல்லாமல் இல்லை” என்கிறார்கள் புதுச்சேரிக்காரர்கள்.

ஆனால் பாஜக தரப்பிலோ, “மாநிலத்தின் நிதிநிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் இஷ்டத்துக்கு திட்டங்களை அறிவிக்கிறார் ரங்கசாமி. அதையெல்லாம் செயல்படுத்த சாத்தியம் இல்லை என்பதால்தான் அதிகாரிகள் அந்த கோப்புகளை கிடப்பில் வைக்கிறார்கள்.

பிரதமருடன் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள்

மற்றபடி, புதுவைக்குத் தேவையான அத்தியாவசிய திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. நடப்பது எங்கள் கூட்டணி அரசு என்பதால், நல்ல திட்டங்களுக்கு எங்கள் எம்எல்ஏக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்” என்கிறார்கள்.

டெல்லிவாலாக்கள், புதுச்சேரி அரசியலில் இப்படி சிங்காரித்து மூக்கறுக்கும் வேலையை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செய்து கொண்டிருப்பார்களோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE