அணுகு சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அணுகு சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து வட்டாட்சியர் அறையில் ஐந்தாம் தூண் அமைப்பு, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே இருப்புப்பாதை பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், ஜமீன்பேட்டைத் தெரு, பெரியார்தெரு, கோபால்செட்டி தெரு, நடராஜபுரம்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களை தவிர்த்து, அவசர வாகனமான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்கள் சென்று வர முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஐந்தாம் தூண் அமைப்பு, அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலம் கையகப்படுத்தும் பணியில் கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. அதன் பின்னர் பணிகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.

நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து, அணுகு சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி ஜமாபந்தி நாளில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என 5-ம் தூண் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஜமாபந்தி தொடங்கியவுடன் அங்கு வந்த 5-ம் தூண் அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜேசு கண்ணா, முத்துவேல்ராஜா, சுதாகரன் உள்ளிட்டோர் வட்டாட்சியர் அறைக்குச் சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் ஜமாபந்தி அலுவலர் ஹபீபு ரஹ்மான், வட்டாட்சியர் சரவணப்பெருமாள் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அதிகாரிகள் சார்பில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது என கடிதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க மறுத்த போராட்டக் குழுவினர், ஜூன் 18-ம் தேதி கோவில்பட்டிக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நபார்டு கோட்ட பொறியாளர் நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களை திரட்டி வந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம், என அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE