மாணவர்கள் வெற்றியை தன்னுடைய வெற்றியாகக் கருதியவர் தொ.ப.

By கே.கே.மகேஷ்

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் நினைவு ஆய்வுக் கருத்தரங்கம் மதுரையில் இன்று (சனிக்கிழமை) மாலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், "தொல்லியல் துறையில் எங்கள் முன்னோடி தொ.ப. அவர்கள். முறைப்படி பயிற்சிபெற்றவர். ஆதிச்சநல்லூருக்கு சென்றிருந்தபோது சொன்னார், 'நாம் இதுவரையில் இடுகாடுகளை மட்டுமே ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். ஆய்வு செய்ய வேண்டிய வாழிடங்கள் ஏராளமாக இருக்கின்றன' என்று. இப்போது அவர் இருந்திருந்தால், கீழடி, கொற்கை அகழாய்வுகளைக் கண்டு மகிழ்ந்திருப்பதுடன், அதுபற்றிய புதிய புதிய செய்திகளையும் நமக்குத் தந்திருப்பார்" என்றார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், "ஒருமுறை நான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியேவந்தபோது, முருகனின் இடுப்பில் இருந்த குறுவாளை கவனித்தீர்களா, காலடியில் இருந்த கல்வெட்டைப் பார்த்தீர்களா? என்று கேட்டார் தொ.ப. எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்து, அரிய தகவல்களை வெளிப்படுத்தியவர் அவர். ஆய்வு நூல் என்றால், ஆயிரம் பக்கமல்ல. அவரது எந்த ஆய்வுக்கட்டுரையும் 3 பக்கத்தைத் தாண்டியதில்லை. என்னுடைய பட்டிமன்றத்தை பலர் பாராட்டியிருக்கிறார்கள். தொ.ப. மட்டும்தான் அருமையாக விமர்சனம் செய்வார். மாணவர்களின் வெற்றியை தன்னுடைய வெற்றியாகக் கருதியவர் அவர். திருவிக விழாவில் என்னுடைய உரையை கலைஞர் கருணாநிதி பாராட்டிய செய்தியறிந்து, கட்டிப்பிடித்து வென்றுவிட்டீர்கள் ஞானசம்பந்தம் என்று பாராட்டினார்" என்றார்.

சிவகங்கை பேராசிரியரும், தொ.ப.வின் நண்பருமான ம.பெ.சீனிவாசன் பேசுகையில், "பணியில் சேர்ந்த புதிதில், இளையான்குடி கல்லூரிக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அப்போது தொ.ப.வின் வகுப்புத் தோழர் ச.ஆறுமுகம், அங்கே தொ.ப. என்றொருவர் இருக்கிறார். கெட்டிக்காரர், நல்ல அறிவாளி. வாய்ப்பிருந்தால் அவரைச் சந்தித்துப் பேசுங்கள் என்றார். எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் வகுப்புத் தோழரின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. ஆனால், படிக்கிற காலத்திலேயே அப்படிப் பெயர் பெற்ற தொ.ப.வை சந்தித்தது என் வாழ்வில் திருப்புமுனை. நாத்திகரான அவர் அழகர்கோயில் குறித்தும், மதுரை மீனாட்சி குறித்தும் ஆய்வுசெய்து வெளிப்படுத்திய தகவல்கள் அற்புதமானவை. ஒரு ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரது அழகர்கோயில் நூலே முன்னோடி." என்றார்.

தமிழக சுங்க மற்றும் கலால் வரித்துறை ஆணையர் சா.ரவிசெல்வன் பேசுகையில், "ஐ.ஏ.எஸ். படிப்புக்குத் தயாரான மாணவப் பருவத்தில் அவரைச் சந்தித்தேன். வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் மதிப்புடன் நடத்துவார், வழிகாட்டுவார். பெரியாரையும், அண்ணாவையும் நேசித்த தொ.ப. திராவிட இயக்கத் தலைவர்கள் தவறு செய்தால் அதை விமர்சிக்கவும் தயங்கியதில்லை" என்றார்.

நிகழ்ச்சியில், தொ.ப.வின் களிமண் சிற்பம் ஒன்று அவரது குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தொ.ப.வின் மூளைக்குள் தந்தை பெரியார் இருப்பது போன்ற அந்த சிற்பத்தைப் பெற்றபோது, அவரது மகள் விஜயலட்சுமி நெகிழ்ந்தார்.

முன்னதாக பேராசிரியர் கா.சாகுல்ஹமீது வரவேற்றார். பேராசிரியர் க.முத்துவேல் நன்றி கூறினார். தொ.ப.வின் மனைவி இசக்கியம்மாள், மகள் விஜயலட்சுமி ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொ.ப.வின் மாணவர்களும், இன்றைய பேராசிரியர்களுமான ஆ.அழகுசெல்வம், ஆ.த.பரந்தாமன், இரா.தமிழ்க்குமரன் ஆகியோர் செய்திருந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE