தேரோட்டம் நடக்கவில்லை என்றால், அரசனுக்கு ஆகாது -எச்.ராஜா

By காமதேனு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அது அரசுக்கு ஆகாது என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை(டிச.19) நடைபெற இருந்த தேரோட்டத்துக்கு, கரோனா ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டது.

இச்சூழலில் பா.ஜ.க முன்னாள் தேசியச் செயலாளர் எச். ராஜா இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். கோவிலுக்குள் சென்று நடராஜரை வழிபட்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “சிதம்பரம் நடராஜர் கோயிலை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சித்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பால் அது நடைபெறவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா நிலத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்கா இடத்தை மீட்க வேண்டும். வாடகை வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி போன்றவர்கள், ‘நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு 8 ஆடு கேட்பதைப்போல’ செயல்படுகிறார்கள்.

தில்லை நடராஜர் கோயில் தேரோட்டம் நடத்தக் கூடாது என்கிறார்கள். தமிழக முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கிறார்கள். ஆனால் அதே மாதிரி கூட்டம் நடராஜர் கோயிலுக்கு வந்தால் தொற்று பரவுமா. பாஜகவினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியாவது சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தை நடத்த வேண்டும்.

ஒரு அமைச்சர் என்னை வெறி நாய் என்கிறார். திருடனைப் பார்த்து நாய் குரைக்கத்தான் செய்யும். இந்து சமய அறநிலையத் துறை கோயில் நிலங்களை கொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது.

கடந்த வருடம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிமன்ற உத்தரவுப்படி தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் நடக்கவில்லை என்றால், அரசனுக்கு ஆகாது என்பார்கள். அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இடிந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பராமரிக்கவில்லை. ஆனால், நன்றாக இருக்கின்ற கோயில்களை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபடக் கூடாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE