‘தேர்தல் சமயங்களில் மட்டும் வாசலுக்கு வரும் அரசியல்வாதிகள்’ என்பது பல ஆண்டுகளாக பொதுமக்களிடம் நீடிக்கும் கருத்துகளில் ஒன்று. இதை ஆமோதிப்பதுபோல், உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. இம்மாநிலத்தில், ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் எதிரொலியாக பிரதமரின் அரசுரீதியான வருகை பார்க்கப்படுகிறது.
பாஜக ஆளும் உபியில் மீண்டும் அக்கட்சியின் ஆட்சி அமைப்பதை முறியடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், தன் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தொடங்கி உள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்காவும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டெல்லியை ஆளும் ஆம் ஆத்மியும் தன் பங்குக்கு உபியின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான பிரச்சாரத்தை அர்விந்த் கேஜ்ரிவால் ஜன.2-ல் தொடங்குகிறார்.
இந்நிலையில், பாஜக தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக பல திட்டங்களை கடைசி நேரத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தே மீண்டும் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுகிறார். இருப்பினும், பாஜகவின் முக்கிய முகமாக பிரதமர் நரேந்திர மோடியே இன்னும் கருதப்படுகிறார்.
இதனால், தேர்தல் சமயத்தில் அவரது உபி வருகை மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இதனால், மத்திய அரசு மற்றும் உபி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடியின் உபி வருகை அதிகரித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 10 நாட்களில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளன. அவர், இன்று ஷாஜாஹான்பூரில் 594 கி.மீ நீளமுள்ள கங்கா எக்ஸ்பிரஸ்வே சாலைக்கான பணிகளை அடிக்கல் நட்டு தொடங்கி வைக்கிறார்.
டிச.21-ல், பிரயாக்ராஜில் பெண்கள் பயன்பெறும் திட்டமான ‘மகிளா சமக்ரா விகாஸ்’ தொடங்கி வைக்க வருகை தர உள்ளார். இதற்காக சுமார் இரண்டரை லட்சம் பெண்களுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இத்துடன், பிரயாக்ராஜில் புதிதாக நான்குவழிப் பாதைக்கான திட்டத்தை தொடங்க அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.
டிச.23-ல் தனது மக்களவை தொகுதியான வாராணசிக்கு மீண்டும் வருகை தருகிறார். இங்கு பொதுக்கூட்ட மேடையில் ரூ.1,500 கோடிக்கு பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு டிச.28-ல், கான்பூரில் மெட்ரோ ரயில் வசதியை தொடங்கி வைக்கிறார். இதுவன்றி, ஜனவரியிலும் பிரதமர் மோடியின் உபி வருகை தொடரத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ‘காமதேனு’ இணையத்திடம் உபியின் பாஜக செய்தித்தொடர்பாளரான மணிஷ் தீக் ஷித் கூறும்போது, ‘‘உபியின் பின்தங்கியப் பகுதியாகக் கருதப்படும் புந்தேல்கண்ட்டுக்கு ஜனவரி முதல் வாரத்திலும் பிரதமர் இங்கு வருகைபுரிய உள்ளார்” எனத் தெரிவித்தார்.
கடந்த டிச.13-ல், பிரதமர் மோடி வாராணசி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி புனரமைப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான முறையிலான அந்த 2 நாள் விழா, உபி சட்டப்பேரவை தேர்தலை மனதில்வைத்தே நடத்தப்பட்டதாகவும் கருதப்பட்டது. தேர்தல் நெருங்கும் காலத்தில் அதிகரித்துள்ள பிரதமர் மோடியின் வருகை அதன் அறிவிப்புக்குப் பிறகு மேலும் அதிகமாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.