விசைப்படகு மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம்: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் வழங்கல்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரி சார்பில் பயிற்சி பெற்ற 34 மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.

14 கடலோர மாவட்டங்களை கொண்டுள்ள தமிழ்நாடு, கடல் மீன்பிடிப்பில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இப்படகுகளை இயக்கும் மீனவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி தங்களுடைய அனுபவ அடிப்படையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை மற்றும் ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் அமைந்துள்ள கடல்சார் பயிற்சி இயக்குநரகமும் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் 'படகு என்ஜின் பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் மாலுமிக்கலை' பற்றிய ஒருவார காலப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இப்பயிற்சிகள் தமிழக அரசின் 'ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி மையங்களை நிறுவுதல்' எனும் திட்டத்தின் கீழும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் மொத்தம் 450 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட மீனவர்களில் இதுவரை சுமார் 66 மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். இம்மீனவர்கள் 24 மீட்டர் ஒட்டுமொத்த நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட 240 குதிரைத் திறனுக்கும் குறைவான இயந்திரம் பொறுத்தப்பட்ட படகுகளை இயக்க உரிமம் பெற்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் மீனவர்களுக்கு 'படகு ஓட்டுநர் உரிமம்' வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் தலைமை வகித்து, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 34 விசைப்படகு மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமங்களை வழங்கினார்.

மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை தலைவர் நீ.நீதிச்செல்வன், பேராசிரியர் ந.வ.சுஜாத் குமார், தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகத்தின் முதல்வர் ஜே.மோகன்குமார், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் உதவி இயக்குநர் தி.விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE