தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: அரசாணை பிறந்ததன் பின்னணி

By காமதேனு

தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவசியமா, அதற்கு எழுந்து நிற்க வேண்டுமா என்பதான ஐயங்களும், கேள்விகளும் அண்மையில் அடுத்தடுத்த பல சம்பவங்களின் வாயிலாக எழுப்பப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலப் பாடலாக இன்று(டிச.17) அறிவிக்கப்பட்டுள்ளது. 'நீராருங் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பெறும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். மேலும், தனியார் மத்தியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஊக்குவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

வாழ்த்து பாடப்படுவதுடன் அனைவரும் எழுந்து நிற்பதும் அவசியம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இசைத்தட்டு ஒலிக்கச்செய்வதை விட பாடலில் தேர்ச்சிப் பெற்றவரை கொண்டு வாய்ப்பாட்டாக பாடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த ஒற்றை உத்தரவின் மூலம் பல தரப்புகளுக்கு பதில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இயங்கும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை புறக்கணித்து வருவது குறித்து பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்ற கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அவர் எழுந்து நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது. உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடந்தபோதும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதன் அவசியம், எழுந்து நிற்க வேண்டியதன் முக்கியத்துவம், அவை குறித்த சட்டப்படியான மற்றும் நிர்வாக ரீதியிலான வழிகாட்டுதல்கள் குறித்து நீதிமன்றமும் கேள்விகள் எழுப்பியது.

இவை அனைத்துக்கும் ஒரே அரசாணையின் மூலம் தற்போது தமிழக அரசு தீர்வு தந்துள்ளது. இந்த உத்தரவு தமிழகத்தில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE