தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

By காமதேனு

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் அதிவேகமாக பரவிவரும் ஒமைக்ரான் தொற்று நேற்று(டிச.15) தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவிலிருந்து தோஹா வாயிலாக, சென்னை திரும்பிய ஒரு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் சக பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 47 வயது ஆண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் ஒரு சக பயணி ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரியில் உருமாறிய கரோனாவின் அடையாளங்கள் தென்படவே, ஒமைக்ரான் உறுதிபடுத்தலுக்காக அந்த மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் முடிவுகள் வெளியான நிலையில், நேற்றை தினம் 47 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். எஞ்சியவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று(டிச.16) கிடைக்கப்பெற்றதில், அவர்கள் அனைவருக்குமே ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இந்த வகையில் 8 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானது.

இது தவிர காங்கோ தேசத்திலிருந்து ஆரணிக்கு திரும்பிய ஒரு பெண்ணுக்கும் ஒமைக்ரான் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை இன்று வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றுவதன் மூலம் ஒமைக்ரான் மற்றும் கரோனா பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “தடுப்பூசிகள் 2 டோஸ்களையும் முழுமையாக போட்டுக்கொள்வதுடன், முகக்கவசம் அணிந்திருப்பது, தனி நபர் இடைவெளியை பராமரிப்பது, அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவது, அறையை காற்றோட்டமாக வைத்திருப்பது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனாவை விட 70 மடங்கு வேகமாக ஒமைக்ரான் பரவி வருகிறது. மேலும் தொற்றிய 24 மணி நேரத்தில் மனித நுரையீரலைத் தாக்குகிறது. ஆனபோதும் கரோனாவை விட 10 மடங்கு குறைவாகவே பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவு என்பதற்காகப் புதிய ஒமைக்ரான் குறித்து அலட்சியம் கொள்வதும் கூடாது. தொடர்ந்து உருமாறி வரும் இயல்புடைய கரோனா வைரஸ், அதன் திரிபடைந்து இன்னொரு நிலையில், எதிர்பாரா பாதிப்புகளை திடீரென ஏற்படுத்தவும் கூடும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் கரோனா அடுத்த அலை உச்சம் தொடும் என்பதான மருத்துவ கணிப்புகளுக்கு மத்தியில், நமது எச்சரிக்கையும், கரோனா தடுபு நடவடிக்கைகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE