லக்கிம்பூர் கெரி சம்பவத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், மகன் செய்த குற்றத்துக்காகத் தந்தை தண்டிக்கப்பட வேண்டுமா எனும் எண்ணம் பாஜகவில் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா பயணம் செய்த கார், விவசாயிகள் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 4 விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்தனர். விவசாயிகளின் கடும் போராட்டத்துக்குப் பிறகே ஆஷிஸ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்டார்.
எனினும், அது மட்டும் போதாது; அஜய் குமார் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என விவசாயிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். இதற்கிடையே, லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக விசாரித்துவந்த சிறப்பு விசாரணைக் குழுவினர், இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால், அஜய் மிஸ்ரா பதவி விலகியாக வேண்டும் அல்லது அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் குரல்கள் மேலும் வலுப்பெற்றிருக்கின்றன.
போதாக்குறைக்கு, லக்கிம்பூர் கெரியில் நேற்று (டிச.15) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அஜய் மிஸ்ரா, விசாரணைக் குழு அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் கடும் கோபம் காட்டியது மேலும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்ததுடன், அவர்களைத் தாக்கவும் முற்பட்டார் எனப் புகார்கள் எழுந்தன. அதுதொடர்பான காணொலியும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இத்தனைக்குப் பிறகும், அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க மோடி அரசு தயங்குவது ஏன் என்பது முக்கியமான கேள்வி. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய இணை அமைச்சரை, அதுவும் அமித் ஷா அமைச்சராக இருக்கும் உள் துறையின் இணை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்வது மோடி மீதான பிம்பத்தைச் சரியவைக்கும் எனும் எண்ணம் பாஜகவில் நிலவுகிறது. உத்தர பிரதேசத்தில் அமித் ஷாவின் வலது கரமாக இருப்பவர் என்றே அஜய் மிஸ்ரா கருதப்படுகிறார். 2014 மக்களவைத் தேர்தலின்போது, உத்தர பிரதேச பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா இருந்தபோது அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அஜய் மிஸ்ரா இருந்திருக்கிறார்.
அதேசமயம், அஜய் மிஸ்ரா மீது ஏற்கெனவே வேறு சில புகார்களும் உண்டு. 2003-ல் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் திகுனியா பகுதியில் பிரபாத் குப்தா எனும் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என கூடுதல் அமர்வு நீதிமன்றம் அஜய் மிஸ்ரா உள்ளிட்டோரை விடுவித்தது. எனினும், அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசும், கொல்லப்பட்ட பிரபாத் குப்தாவின் குடும்பத்தினரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு விசாரணை இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
விவசாயிகள் படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னர் பிரபாத் குப்தா கொலைவழக்கு குறித்தும் எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. போராட்டம் நடத்திய விவசாயிகளை எச்சரிக்கும் விதமாக அஜய் மிஸ்ரா பேசிய காணொலியும் வைரலானது.
முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுப்பது, உத்தர பிரதேசத்தில் உள்ள முன்னேறிய வகுப்பினரின் வாக்குகளை இழக்க வழிவகுக்கும் எனும் எண்ணம் பாஜகவில் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஏதேனும் வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே அவர்களைப் பதவியிலிருந்து விலக்க முடியும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சிறப்பு விசாரணைக் குழு இன்னமும் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்பதையும், வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதையும் பாஜகவினர் வாதமாக முன்வைக்கின்றனர். கூடவே, மகன் செய்த தவறுக்குத் தந்தை ஏன் தண்டிக்கப்பட வேண்டும் எனும் கேள்வியும் பாஜகவினர் மத்தியில் நிலவுகிறது.
எனினும், தார்மிக அடிப்படையில் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றே எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கோரிவருகின்றன. மத்திய உள் துறை இணை அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் அஜய் மிஸ்ரா விஷயத்தில் மோடி அரசு என்ன முடிவெடுக்கும் என்பது, உத்தர பிரதேசத் தேர்தல் தேதி நெருங்கும்போது தெரிந்துவிடும்.