அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று அதிரடி ரெய்டு மேற்கொண்டது. அதிமுகவின் வளர்ச்சியை பொறுக்காத திமுகவின் காழ்ப்புணர்ச்சியே இந்த ரெய்டுக்கு காரணம் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்துள்ளார்.
2016 அதிமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தவர் தங்கமணி. ஈபிஎஸ் அணியில் பிரதான இடம் பிடித்திருந்தாலும், ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சமரசம் செய்யும் அளவுக்கு இருவருக்குமே நெருக்கமானவர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி சரியாது இருக்க உதவி வருபவர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டு நடவடிக்கையில், ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னேயும் ஒரு காரணம் சொல்வார்கள். தங்கமணி ரெய்டுக்கு பின்னணியில் மின்சாரத் துறையை தற்போது வகிக்கும் செந்தில் பாலாஜியை கைக்காட்டுகிறார்கள். மின்துறை தொடர்பான நடவடிக்கைகளில் செந்தில் பாலாஜிக்கு சங்கடமூட்டும் சிக்கல்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. மின்சாரத் துறையில் தங்கமணியின் செல்வாக்கு இப்போதும் தொடர்வதாக சந்தேகிக்கும் செந்தில் பாலாஜி இந்த ரெய்டு நடவடிக்கை மூலம், தங்கமணியின் முகாமில் தடுமாற்றங்களை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்.
அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் திமுகவை மீட்டெடுக்கும் அசைன்மென்டை ஸ்டாலினிடம் பெற்றுள்ள செந்தில் பாலாஜி, அதன் நிமித்தமும் தங்கமணி ரெய்டுக்கு நியாயம் சேர்த்தார். வேலுமணி போலவே தங்கமணிக்கு எதிராகவும் ரெய்டுகள் நீள்வது ஈபிஎஸ்ஸை வெகுவாக சீண்டும் நடவடிக்கை என்பதும் ஒரு காரணம்.
எதிர்பார்த்தது போலவே தங்கமணி மீதான ரெய்டுக்கு ஈபிஎஸ் பலமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ’உட்கட்சி தேர்தல்களை வெற்றிகரமாக முடித்து, அடுத்த கட்டம் நோக்கி அதிமுக வளர்ச்சி அடையவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள் ஏவப்படுவதாக’ ஈபிஎஸ் கொதித்துள்ளார். மேலும், ’அதிமுகவை நேரடியாக எதிர்க்க திராணியல்லாத திமுக அரசு, லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி எங்களை மிரட்டப் பார்க்கிறது’ எனவும் பொங்கியுள்ளார்.