தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில், வரும் 20-ம் தேதியில் இருந்து பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், முக்கிய சீசன் நேரமான இப்போது வருவாய் இழந்து தவித்து வருகின்றனர் அந்தப்பகுதி வியாபாரிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. ‘குமரியின் குற்றாலம்’ எனப்படும் இந்த அருவியில், ஆண்டுமுழுதுமே தண்ணீர் பாய்ந்தோடும் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதுமே களைகட்டும். அதிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு ஆன்மிக யாத்திரை செல்வோர் கன்னியாகுமரிக்கும் வருவார்கள்.
இந்த முக்கிய சீசனைக் குறிவைத்தே, திற்பரப்பு பேரூராட்சியில் ஏலம் பிடித்து பலரும் அருவியைச் சுற்றிலும் கடை அமைத்துள்ளனர். கரோனா நடைமுறைகளினால் மூடப்பட்ட பல சுற்றுலா தலங்களும் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்னும் திற்பரப்பு அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால், இந்த அருவியை மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏக்கத்தோடு பார்த்து திரும்பும் சூழலே உள்ளது.
இதுகுறித்து திற்பரப்பு அருவியின் அருகில் கடைவைத்திருக்கும் பிரபாகுமார் காமதேனுவிடம் கூறும்போது, ‘கரோனா நடைமுறையால் அருவியில் குளிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் தடுப்பு வேலிகளும் அமைத்தனர். சர்வதேசச் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டனர். அதேபோல் திற்பரப்பு அருவிக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.
இதேபோல் குமரி மாவட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கால் திற்பரப்பு அருவியில் மக்கள் குளிப்பதற்கான தடுப்பு வேலி, சிறுவர் நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதிகளும் சேதமாகி இருக்கின்றன. இதையும் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீர்செய்ய வேண்டும். இப்போது மாவட்டத்தின் ஜீவாதாரமான பேச்சிப்பாறை அணையின் உபரிநீர் திறப்பின் அளவும் கணிசமாகக் குறைந்துள்ளது. இப்படியான சூழலில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுலாவை நம்பியே தொழில் செய்யும் சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும். குற்றாலத்துக்கு நீதியும், திற்பரப்புக்கு அநீதியும் செய்யாமல் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார் அவர்.