மதுரை: நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்கள், தனியார் ஆர்வம் காட்டாததால் மதுரை மாநகராட்சி தமுக்கம் மாநாட்டு மைய அரங்கத்தை இணைய வழி மூலம் (புக்கிங்) செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ”ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடியில் மாநாட்டு மைய அரங்கம் (convention centre) கட்டப்பட்டது. தமுக்கம் மைதானத்தில் இந்த அரங்கை கட்டும்போதே பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், எதிர்ப்பை மீறி மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் தரக் கூடியது என்று கூறி இந்த மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டது. 9.68 ஏக்கர் தமுக்கம் மைதானத்தில் 46,300 சதுர அடியில் கீழ் தளம் மற்றும் தரைத்தளம் கொண்டதுமாக இந்த அரங்ம் கட்டப்பட்டது.
கீழ் தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில், தனியார் கண்காட்சி அரங்குகள், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். திமுக ஆட்சியில் இந்த அரங்கம் கட்டி முடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 செப்டம்பர் 8ம் தேதி திறந்து வைத்தார்.
நகரின் மையத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி உள்ள பகுதியில் இந்த அரங்கம் கட்டப்பட்டதால், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் ‘புக்கிங்’ ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள், தனியார் அமைப்புகள், இந்த அரங்கை நிகழ்ச்சிகள் நடத்த ”புக்கிங்” செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனால், மாநகராட்சி எந்த நோக்கத்திற்காக இந்த அரங்கத்தைக் கட்டியதோ அது நிறைவடையாமல் சில நிகழ்ச்சிகளே மிக அபூர்வமாக நடத்தப்பட்டது.
» மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதில் தமிழ்நாடு மின்வாரியம் தீவிரம்
» ஆறரை ஆண்டு அவலம்: புதுச்சேரியில் எப்போது திறக்கப்படும் ரேஷன் கடைகள்?
புத்தக கண்காட்சிகள், அரசு நிகழ்ச்சிகள், தனியார் கண்காட்சிகள் மட்டுமே பெரும்பாலும் இந்த அரங்கில் நடந்தது. சுப நிகழ்ச்சிகள், மற்ற வர்த்தக நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.47.72 கோடி நிதியை இந்த திட்டத்திற்காக முடக்கிய நிலையில் இந்த மாநாட்டு அரங்கால் மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்காமல் இருந்தது. இந்த மாநாட்டு அரங்கம் கட்டுவதற்கு முன், வெறும் தமுக்கம் மைதானமாக மட்டும் இருந்தபோது கூட பிரபலங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்தன.
அப்போது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தமுக்கம் மைதானம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவும் இருந்தது. அதன் மூலம் மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைத்தது. ஆனால், தற்போது போதுமான வசதியுடன் மாநாட்டு மைய அரங்கம் கட்டியும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், இந்த மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போதைய ஆணையாளர் தினேஷ்குமார், இந்த அரங்கை, பொதுமக்கள் எளிமையாக அணுகி ‘புக்கிங்’ செய்யும் வவகையில் இணைய வழி மூலம் பதிவு செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி இன்று இந்த இணைய வழி சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் இந்திராணி, இணைய வழி மூலம் இந்த மாநாட்டு அரங்கை பதிவு செய்யும் சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய மேயர் இந்திராணி, “தமுக்கம் மைதானத்தில் ஏற்கெனவே சேதமடைந்திருந்த கலையரங்க கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மதுரை மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கானது சுமார் 3,500 நபர்கள் பங்கு கொள்ளும் வகையில் சுமார் 10,082 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 800 நபர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உணவு அருந்தும் கூடம் மற்றும் சமையல் அறையுடன் இரண்டு இடங்களில் நவீன கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக தேவைக்கேற்ப நிகழ்ச்சி நடத்தும் வகையில் நவீன நகரும் தடுப்பான்களுடன் நான்கு மற்றும் இரண்டாக பிரித்து கொள்ளும் வகையில் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தின் தரைதளத்தின் கீழ் சுமார் 240 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகனங்களை மற்றும் 215 எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தம் செய்யும் வசதியுடன் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநாட்டு மைய அரங்கம் பதிவு செய்யும் முறைகள் இணைவழி மயமாக்கப்பட்டு இணையவழி mducorpvenuebooking.com மூலமாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமுக்கம் மாநாட்டு மைய அரங்கம் இணைய வழி மூலம் பதிவு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை ஆணையாளர் சரவணன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (வருவாய்) மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை: இந்த மாநாட்டு அரங்கில் ஒரு நாள் வாடகையாக மாநாட்டுமையம் அரங்கு எண்.1க்கு ரூ.52,148, மாநாட்டு மையம் அரங்கு எண்.2க்கு ரூ.52,148, மாநாட்டு மையம் அரங்கு எண்.3க்கு 2,05,433,
மாநாட்டு மையம் அரங்கு எண்.4க்கு ரூ.2,05,433, மாநாட்டு மையம் அரங்கு எண்.5க்கு ரூ.56,889, மாநாட்டு மையம் அரங்கு எண்.6க்கு ரூ.48,475, மாநாட்டு மையம் முழு அரங்கு முழுவதுக்கும் ரூ.6,30,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடகையுடன் 18% GST தொகை தனியாக வசூலிக்கப் படும். மின் கட்டணம் தனியாக செலுத்தப்பட வேண்டும். அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.