இயற்கை வேளாண் கருத்தரங்கில் பிரதமர் மோடி நாளை பேசுகிறார்

By கே.எஸ்.கிருத்திக்

'அமுல்' நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள குஜராத் மாநிலம் ஆனந்தில் இயற்கை விவசாயம், ஜீரோ பட்ஜெட் வேளாண்மை ஆகியவை குறித்த கருத்தரங்கு நேற்று முதல் நடந்துவருகிறது. நாளை(டிச.16) வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், முன்னோடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

கருத்தரங்கின் நிறைவாக பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். பொதுமக்களும், விவசாயிகளும் அந்த உரையைக் கேட்டுப் பயன்பெறுவதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பெரிய திரையில் காணொலிக் காட்சி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "வேளாண் கருத்தரங்கில் பிரதமருடன் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ் விராட் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். நிகழ்ச்சியை தமிழக விவசாயப் பெருமக்களுக்கு நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் இறுதியில் பிரதமரின் உரை தமிழில் மொழிபெயர்த்து விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளதுடன், அதுகுறித்த கலந்தாய்வும் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், நானும், சுமார் 5000 விவசாயிகளும் பங்கேற்கிறோம். தஞ்சாவூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் விவசாயிகளுடன் பங்கேற்கிறார்கள். இக்கருத்தரங்கு இயற்கை விவசாயம் மற்றும் ஜீரோ பட்ஜெட் வேளாண் செய்வோருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE