முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஆதரவாகக் குவியும் அதிமுகவினர்

By காமதேனு

முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த இடங்களில் அமைச்சருக்கு ஆதரவாகவும் காவல் துறையை எதிர்த்தும் கோஷமிட்டவாறு ஆதரவாளர்களும் அதிமுகவினரும் கூடியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரைத் தொடர்ந்து, வழக்குப் பதிவான நிலையில் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலையிலிருந்தே சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தங்கமணி சொத்துகளைக் குவிக்க, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் உதவியதாகவும், தங்கமணி சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை சட்டபூர்வமான வருமானமாகக் காட்ட முருகன் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாகவும், தங்கமணி ரூ.4,85,72,019-ஐ தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியினர் வாக்குவாதம்

சோதனை நடத்தப்படும் இடங்களில் எல்லாம் கூடும் தங்கமணியின் ஆதரவாளர்களும் கட்சியினரும், காவல் துறையை எதிர்த்து “போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே” என்று கோஷம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். நாமக்கல் கோவிந்தம்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் ஆதரவாளர்கள் காவல் துறையோடு கடுமையாக வாக்குவாதம் செய்ததோடு, தடுப்புக்குப் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளை அப்புறப்படுத்தச் சொல்ல, காவல் துறையினர் அவர்களை தடுத்து விலக்கி உள்ளனர்.

மேலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு முன்பாக அதிக அளவில் ஆதரவாளர்களும் கட்சியினரும் கூடுவதால், வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE