முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை!

By காமதேனு

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும் அவரது நண்பர்கள், உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில், மின் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இவர் மீது, கடந்த 2016 - 20 கால கட்டத்தில் ரூ.4.85 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், தங்கமணி அவரது மனைவி சாந்தி, மகன் தரணீதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல், தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்செங்கோடு அருகே ஆலம்பாளையத்தில் தங்கமணிக்குச் சொந்தமான வீடு உள்பட நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை, வேலூர், சென்னை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தங்கமணியின் உறவினர் சிவசுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணியின் மகள் உள்ளிட்ட உறவினர்களின் நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. முறைகேடாகச் சேர்த்த வருமானத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாக எஃப்ஐஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்கமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து 5-வது முன்னாள் அமைச்சராக தங்கமணியும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE