சோனியாவைச் சந்தித்த எதிர்க்கட்சிகள்... சுறுசுறுப்படைகிறதா ஐ.மு கூட்டணி?

By சந்தனார்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலிமை பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தக் கூட்டணியின் இருப்பு குறித்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்த சூழலில், நேற்று (டிச.14) காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் எதிர்க்கட்சிகள் நடத்திய சந்திப்பு, அதற்குத் தொடக்கமாக அமையுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்புவது குறித்த வியூகங்களை வகுக்க, இந்தச் சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேவேளையில், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயலாற்றுவது குறித்த பேச்சுகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதும், கான்ஸ்டிடியூஷன் க்ளப்பில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். எனினும், சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு கவனம் ஈர்த்திருக்கிறது. மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை எளிதாக வீழ்த்தலாம் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்தக் கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்டதாக, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதைத் திரும்பப் பெறும் விஷயத்தில் மத்திய அரசு இதுவரை அசைந்துகொடுக்கவில்லை. இதை வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிநடப்பு செய்துவருகின்றன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் வருத்தம் தெரிவித்தால் மட்டுமே, அவர்கள் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், வருத்தமோ மன்னிப்போ கேட்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை. இந்த விவகாரத்தில் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டங்களில் பல கட்சிகள் பங்கேற்றாலும், சோனியாவுடனான தனிப்பட்ட சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் கொண்டது.

“இந்தச் சந்திப்பு தேசத்தைப் பற்றிய சந்திப்பு. எப்படி ஒன்றிணைந்து முன்னேறுவது, எப்படி இந்தச் சிரமங்களிலிருந்து நாட்டை வெளியில் எடுப்பது என விவாதித்தோம். எங்களுக்குள் ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டணி வலிமை பெறும் என்று நம்புகிறோம்” என பரூக் அப்துல்லா கூறினார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

காங்கிரஸ் தலைமையில் இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரத்தில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனாவுடன் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அதிகாரபூர்வமாக சிவசேனா இன்னமும் இடம்பெறவில்லை. சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் முன்னெடுத்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை அடையலாம் எனக் கருதப்பட்டது. சஞ்சய் ராவத் அதை முன்னெடுத்து வருகிறார்.

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இருப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. நேற்று ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த திரிணமூல் எம்.பி சவுகதா ராய், “தன்னளவில் செய்திருக்க வேண்டிய வேலைகளைக் காங்கிரஸ் செய்யவில்லை. திரிணமூல் தன் வழியில் செல்கிறது. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னமும் கால அவகாசம் இருக்கிறது. அதற்குள் ஏராளமான விஷயங்கள் நடைபெறவிருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

சோனியா காந்தியுடனான எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்திப்புகள் தொடரும் என சஞ்சய் ராவத் கூறியிருக்கும் நிலையில், அடுத்தட்ட நகர்வுகள் மீது அரசியல் பார்வையாளர்கள் கவனம் குவித்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE