தமிழகத்தில் நுழைந்ததா ஒமைக்ரான்?

By காமதேனு

கரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் பரவல், உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா அளவுக்கு உடல்நலத்தை பாதிப்பது ஒமைக்ரானில் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஒமைக்ரானின் பரவல் வேகமும், வீரியமும் மருத்துவ ஆய்வாளர்கள் மத்தியில் கவலை தந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் அடையாளம் காணப்படுவதற்கு முன்பாகவே, மனிதர்கள் வாயிலாக விமானமேறி உலத்தின் பல்வேறு நாடுகளுக்கும் புதிய உருமாறிய வைரஸ் பரவி விட்டது. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளும் விமான சேவை நிறுத்தம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், ஒமைக்ரான் பரவல் ஊடுருவி இருப்பது அதன் பரவல் வேகத்தைக் காட்டுகிறது. இதையடுத்து, படிப்படியாக தங்கள் நாடுகளில் ஒமைக்ரானின் இருப்பை ஒவ்வொரு தேசமும் உறுதி செய்து வருகின்றன.

இந்தியாவில் இன்றுவரை 38 பேர் ஒமைக்ரான் பாதிப்புடன் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதர மாநிலங்களைவிட மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றுவரை ஒமைக்ரான் அடையாளம் காணப்படாத மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது. ஆனால், நைஜீரியாவிலிருந்து சென்னை திரும்பிய ஒரு குடும்பத்தினருக்கு, ஒமைக்ரான் பாதித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

நைஜீரியாவிலிருந்து தோகா மார்க்கத்தில் சென்னை வந்திறங்கிய, 47 வயது ஆணுக்கும் அவரது குடும்பத்தினர் 6 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் அவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் என முடிவானது. இவர்களில் சிலரின் வைரஸ் மாதிரியில் மரபு மாற்றங்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து 7 பேரின் சளி மற்றும் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் உறுதிபடுத்தலுக்காக பெங்களூரு சென்றிருக்கின்றன. இன்று(டிச.14) அல்லது நாளை அவர்களின் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுவிடும்.

வேகமான பரவலுக்கு அப்பால், உயிரை பாதிக்கும் அளவிலான ஒமைக்ரானின் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என சொல்லப்பட்ட நிலையில், நேற்று இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் டெல்டா போன்ற இதர கரோனா திரிபுகளின் அளவுக்கு ஒமைக்ரானும் வீரியமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற கூற்று பொய்யாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE