மாரிதாஸ் வழக்கு ரத்து; விடுதலை இல்லை

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை சூர்யாநகரைச் சேர்ந்த பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸ், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக கடந்த 9-ம் தேதி, சமூக வலைதளங்களில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். "திமுக ஆட்சியின்கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக்கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்தப் பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக திமுக ஐடி விங்கைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் மாரிதாஸை அன்றைய தினமே கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 ஏ (மத ரீதியான பிரிவினைவாத கருத்துகளைப் பரப்புதல்), 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 505(1), 505(2) (சமூக வலைதளங்கள் மூலம் அரசை மிரட்டுதல்), 124 ஏ (அரசின் மீது வெறுப்புடன் அவதூறு கருத்துகளை வெளியிடுதல்) போன்ற 5 பிரிவுகளின்கீழ், மதுரை புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அந்தப் பதிவும், எஃப்.ஐ.ஆரும்...

இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், மாரிதாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அவர் கைதான நிலையில், நேற்று(டிச.13) காலை முதல் வழக்காக அவரது வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முப்படைத் தளபதி இறப்பு தொடர்பாக சுப்பிரமணியன்சுவாமியும் சந்தேகம் கிளப்பியிருந்தாரே? அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று (டிச.14) 2-வது நாளாக வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், ''மனுதாரர் மாரிதாஸ், முப்படைகளின் தலைமைத் தளபதி மரணத்தில் தேவையற்ற, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கிறார். மாநில அரசுக்கு எதிராகவும், தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை உருவாக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார்'' என்றார்.

மாரிதாஸ் தரப்பு வழக்கறிஞரோ, "மாரிதாஸ் அரசை விமர்சித்து வருபவர். அவரது வாயை அடைப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார். அதை மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், “இவரை மட்டும் போலீஸ் குறிவைக்கவில்லை, இவரைப் போல் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்தைப் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இரு தரப்பு கருத்தையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''மாரிதாஸை சமூக வலைதளத்தில் 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் அவதூறு நோக்கத்தில் அல்லாமல், பிரச்சினையைப் பற்றி நன்கு அறிந்தே ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) மற்றும் (2), 124 (ஏ), 504, 153(ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது பொருந்தாது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டார்.

கடந்த 9-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கை, ஐந்தே நாளில் ரத்து செய்திருக்கிறது உயர் நீதிமன்றம். பத்திரிகையாளர்களை அவதூறு செய்வதற்காக போலி இமெயிலை உருவாக்கிப் பரப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE