திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். உதயநிதியின் அணுக்கத் தோழரான அன்பில் மகேஷே இப்படிச் சொல்லி இருப்பது, ஆழம் பார்க்கும் அரசியல் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
“உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பமும் இதுதான். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் மட்டும் சுருங்கி விடக்கூடாது” என்கிறார் மகேஷ்.
இது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. முதல்வரின் இல்லத்தில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த விருப்பமும் இதுதான் என்று சொல்லும் அரசியல் பார்வையாளர்கள், “குடும்பத்தின் விருப்பத்தை அன்பில் மகேஷ் வாயால் முன்மொழியச் செய்திருக்கிறார்கள். உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது என்று எதிர்பார்ப்பை முதலில் ஏற்படுத்திவிட்டு, அதற்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் விரைவில் நடக்கலாம்” என்கிறார்கள் அவர்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் ஸ்டாலின் பம்பரமாகச் சுழன்று பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்துக்கு அடுத்தபடியாக, 2-ம் கட்ட தலைவர்கள் ஏராளமானோர் இருந்தபோதிலும் உதயநிதிக்கு மட்டுமே பிரச்சாரத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. ஒருவகையில் அவரது பிரச்சாரமும் மக்களிடம் நன்கு எடுபட்டது என்றாலும், ஓரம் கட்டப்பட்ட கனிமொழி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் மனவேதனை அடைந்தார்கள். அந்தத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களை திமுக வென்றது. அதற்கு உதயநிதியின் பிரச்சாரமும் ஒரு காரணம் என்ற பிம்பம் அப்போதே கட்டியமைக்கப்பட்டது. அதன்பிறகு, சில மாதங்களில் இதேபோன்றதொரு குரலை முதன்முதலில் எழுப்பினார் அன்பில் மகேஷ்.
கட்சியில் அதிமுக்கியத்துவம் கொண்டதும் ஸ்டாலின் வகித்ததுமான இளைஞரணி செயலாளர் பதவியை, உதயநிதிக்கு வழங்கவேண்டும் என்று முதல் குரல் கொடுத்ததும் அன்பில் மகேஷ் தான் என்பதைக் கவனிக்க வேண்டும். குரல் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை. அதைச் செயல்படுத்தும் திட்டத்தையும் அவரே தீட்டினார். அதன்படி உதயநிதியை இளைஞரணி செயலாளராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றும்படி, அனைத்து மாவட்ட இளைஞரணிக்கும் அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்கச் செய்தார். அடுத்ததாக, கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கும் அன்பில் மகேஷ் மூலமாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சிலர் விருப்பத்தோடும், பலர் அரைகுறை மனதுடனும் உதயநிதியை இளைஞரணி செயலாளராக்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதன்படி தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆக்கப்பட்டார். அவரை முன்மொழிந்த அன்பில் மகேஷுக்குப் பரிசாக கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது.
அடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. யாரும் சொல்லாமலே உதயநிதிக்கு உரிய முக்கியத்துவம் கிடைத்தது. அப்போது ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் அவர்தான் என்பது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெளிவாக உணர்த்தப்பட்டது. தேர்தலில் திமுக வென்றது, உதயநிதியும் வென்றார். யார் யார் அமைச்சர்கள் என்ற உத்தேசப் பட்டியல்கள் பலவும் வெளிவந்தன. அதில் எல்லாவற்றிலும் உதயநிதியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தேவையற்ற விமர்சனங்களுக்கு அஞ்சி உதயநிதி அமைச்சராக்கப்படவில்லை. பதிலாக, அவரது நெருங்கிய தோழரான அன்பில் மகேஷ் அமைச்சராக்கப்பட்டார்.
உதயநிதிக்கு உள்ளாட்சித் துறையை ஒதுக்கக் கோரியதாகவும், ஆனால், முக்கியமான அந்தத் துறையை ஜூனியரான உதயநிதிக்கு கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை, அதற்குப் பதிலாக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக சிறிதுகாலம் இருக்கட்டும் என்று சொன்னதாகவும் அப்போது தகவல்கள் வெளிவந்தன. ஆனால், ‘இருந்தால் முக்கியமான துறையில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் இப்போதைக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்’ என்று துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் மறுத்துவிட்டதாகவும் பேச்சு அடிபட்டது. அமைச்சரவை மாற்றத்தின்போது உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று அந்த சமயத்தில் குடும்பத்தினரை ஸ்டாலின் சாந்தப்படுத்தியதாகவும் செய்தி உண்டு.
இதோ, இப்போது அதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நேரம்பார்த்து, உதயநிதியை அமைச்சராக்கவேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறார் அன்பில் மகேஷ். அவரை அமைச்சராக்க யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லைதான். ஆனாலும் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் என்ற விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அப்போது தராமல் தவிர்த்தார் ஸ்டாலின். ஆனால் இப்போது கட்சிக்காரர்களும், மக்களும் விரும்புகிறார்கள் என்று சொல்லி அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். அதற்கான முன்னோட்டமாக மகேஷ் மூலமாக இந்தச் செய்தியை கசியவிட்டு, இதற்கு எப்படியெல்லாம் எதிர்வினை வருகிறது என்று எதிர்பார்க்கிறார் ஸ்டாலின்.
இப்போது உதயநிதி அமைச்சராக்கப்படுவதற்கான காலம் கனிந்திருக்கிறதா என்று கேட்டால், கனிந்திருக்கிறதோ இல்லையோ கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஏற்கெனவே முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் அனைத்து மரியாதைகளும் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளால் உதயநிதிக்கு தரப்படுகின்றன. சட்டப்பேரவையில் உதயநிதியை வணங்கிவிட்டுத்தான் திமுக உறுப்பினர்கள் பேசவே ஆரம்பிக்கின்றனர்.
பேச்சிலும் உதயநிதியை வானளாவப் புகழ்கிறார்கள். 3-ம் கலைஞரே என்கிற உருவகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற ராஜேஷ்குமார், “அண்ணன் உதயநிதி வாழ்க” என்று நாடாளுமன்றத்திலேயே ஒலித்தார். இதுவெல்லாம் உதயநிதிக்கான முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது. அவருக்கு அமைச்சர் மட்டுமல்ல, துணை முதல்வர் பதவியே கொடுக்கலாம் என்ற அளவுக்கு திமுகவினர் மத்தியில் எண்ணத்தை அழகாக திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அதோடு, உதய் ஆதரவு திமுகவினர் இன்னொரு காரணத்தையும் அழுத்தமாக எடுத்து வைக்கிறார்கள். “முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றி வருகிறார்” என்று உயர் நீதிமன்ற நீதிபதியே பாராட்டும் அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின். முதல்வர் என்ற முறையில் எல்லா இடங்களுக்கும் அவரே நேரில் சென்றுவருகிறார். ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வரையிலும் இடைவிடாமல் உழைக்கிறார். இந்நிலையில் அவரது பணிச்சுமையை பகிர்ந்துகொள்ள சரியான ஒரு ஆள் வேண்டும்.
தந்தையின் பணிச்சுமையை பகிர்ந்துகொள்ள, தனயன் உதயநிதியைவிட வேறு யார் தகுதியானவராக இருக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பும் திமுகவினர், உதயநிதி அமைச்சராக்கப் பட்டால் முதல்வர் செல்லவேண்டிய பல இடங்களுக்கும் உதயநிதி அதிகாரபூர்வமாகவே செல்ல முடியும்.
முன்பு கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஸ்டாலின் துணை முதல்வராக இருந்துகொண்டு தமிழகம் முழுதும் சுற்றிவந்து பணியாற்றியதுபோல, உதயநிதியும் அரசு நிர்வாகத்தில் முதல்வருக்கு உதவியாக இருப்பார். முதல்வரின் பணிச்சுமை பாதியாகக் குறையும். அதனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட இதுவே சரியான தருணம்” என்கிறார்கள்.
அப்புறமென்னப்பா, அன்பில் மகேஷ் சரியாத்தானே சொல்லி இருக்கிறார்!