பிரபல திரைப்பட விமர்சகரும், யூடியூபருமான ப்ளு சட்டை மாறன் இயக்கத்தில் உருவான 'ஆன்டி இண்டியன்' திரைப்படம், கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்தப் படம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதவெறியர்களையும், மதத்தை வைத்து அரசியல் செய்வோரையும் கடுமையாக விமர்சித்திருப்பதாகத் தெரிகிறது. இதனால், மூன்று மத தீவிரப் போக்காளர்களிடம் இருந்தும் படத்துக்கு எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பார்வதி தியேட்டரிலும் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று(டிச.11) மாலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த பாஜக பிரமுகரும், தேனி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான ராஜபாண்டி தலைமையிலான பாஜகவினர், இந்து மதத்தையும், பாஜகவையும் இழிவுபடுத்துகிற இந்தப் படத்தை ஓட்டக்கூடாது என்று கோஷமிட்டனர். படத்தை நிறுத்தச் சொல்லி மிரட்டியதால், படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். பாஜகவினரின் மிரட்டலால் தியேட்டரில் கட்டப்பட்டிருந்த ஆன்டி இண்டியன் பட பேனரும் இறக்கப்பட்டது.
படத்தை நிறுத்தியதுடன் நில்லாமல், அதை புகைப்படத்துடன் முகநூலில் பதிவு செய்துள்ளார் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி. அதில், "இன்று பெரியகுளத்தில் ஆன்டி இண்டியனுக்கு எதிர்ப்பு தெரிவித்த ட்ரூ இந்தியன்கள். படமே ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இப்படத்தை, திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இதுகுறித்து போலீஸில் புகார் செய்துள்ளதோடு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பும் கேட்டிருப்பதாக இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.