அணைப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழகத்துக்கு ஆபத்து!

By கே.கே.மகேஷ்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா, நாடு தழுவிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேறியுள்ள நிலையில், இச்சட்டத்தால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றொரு குரல் எழுந்திருக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினைகள் உள்ள நிலையில், அதிகாரத்தை மத்திய அரசே கையில் எடுத்துக்கொள்ளும் வகையில் நிறைவேற்றப்பட்டதுதான் மத்திய அணைப் பாதுகாப்புச் சட்டம். அணைப் பாதுகாப்புக்கென்று தேசியக் குழு ஒன்றும், ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தவும், அதற்கு மத்திய அரசின் சார்பில் 10 பேரையும், மாநில அரசுகள் சார்பில் 7 பேரையும் நியமிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை இன்னொரு மாநிலத்துக்குள் இருந்தால், அதை எப்படி நிர்வகிப்பது, எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் இந்தச் சட்டத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல ஒவ்வொரு அணைக்கும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்றும், புதிய அணைகள் கட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்தும் முன்கூட்டியே அறிக்கை தயாரிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எதற்காக சர்ச்சை?

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்று அதிகாரக் குவிப்பில் ஆர்வம் காட்டுகிற மத்திய அரசு அதன் ஒரு செயல்திட்டமாகவே இந்தச் சட்டத்தைக்கொண்டுவந்திருப்பதாக திமுக போன்ற கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதிமுகவுக்கும் இதில் உடன்பாடில்லை. இந்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்றக்கூடாது, தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்கள். ஆனாலும் சட்டம் திருத்தமின்றி அப்படியே நிறைவேறி இருக்கிறது.

மத்திய நீர்வளக் குழுவானது மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசுக்கென தனிச்சட்டம் இல்லை என்பதால், ஒரு சட்டம் இயற்றுமாறு 1986-ம் ஆண்டே பரிந்துரை செய்தது என்றும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசே இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். இந்தச் சட்டத்தை மத்திய அரசு தான்தோன்றித்தனமாக கொண்டுவரவில்லை என்றும், ஆந்திரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால்தான் இச்சட்டத்தைக் கொண்டுவர நேரிட்டது என்றும் பாஜக கூறுகிறது.

பழனிசாமியும் எதிர்த்தார்

கடந்த 2018 ஜூன் மாத இறுதியில், அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அன்றைய முதல்வர் பழனிசாமியும், இச்சட்டம் குறித்து விமர்சித்தார். மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு மசோதாவில், தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வகையிலான விஷயங்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், "தற்போதைய நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் உள்ள 4 அணைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், மாநிலங்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். அந்த தீர்மானத்தைத் திமுகவும் ஆதரித்தது.

அணைப் பிரச்சினையில் ஆதாயம் தேடும் முயற்சியாகவே இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கவும், கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவைக்கவும் அம்மாநிலங்களில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையை வைத்து அரசியல் செய்யவுமே இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே முரணும், பகையும் மூள்வதற்கு முக்கியக் காரணமாக இருப்பது நதிநீர் பிரச்சினை தான். எனவே, தேச ஒற்றுமை கருதியே இந்த அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது என்கிறார்கள் பாஜக அபிமானிகள்.

பொறியாளர் அ.வீரப்பன்

தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?

இச்சட்டத்தால் தமிழகத்துக்கு என்ன பாதிப்பு என்று பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் அ.வீரப்பனிடம் கேட்டபோது, "மோடி அரசு அமைத்தவுடனே மாநில அரசுகளின் அதிகாரங்களை எல்லாம் பறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளைச் செய்தார். அந்த வகையில், நீர்வளத் துறை அதிகாரங்களையும் மாநிலங்களில் இருந்து பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் அணைகள் பாதுகாப்புச் சட்டம். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அணை பாதுகாப்பாக இல்லை, பராமரிப்பு சரியில்லை, உடைந்துவிட்டது என்று சொன்னால், மத்திய அரசு தலையிடுவதில் அர்த்தம் இருக்கிறது. இங்குள்ள மேட்டூர் அணையில் அதன் உச்சபட்ச அடியைவிடக் கூடுதல் தண்ணீர் கடந்த ஒரு மாதமாக நிற்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை. கேரள அரசு கடுமையாக எதிர்த்த 142 அடி உயரத்திலேயே 10 நாட்களுக்கு மேலாகத் தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறோம், முல்லை பெரியாறு அணையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நமக்கு எதற்கு இந்தச் சட்டம்? இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் பின்னணியில் கேரள, கர்நாடக மாநிலங்கள் இருக்கின்றன என்று சந்தேகிக்கிறேன்.

இந்தச் சட்டம் வருமானால், அணைகள் எந்த மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கிறதோ அந்த அணை அந்த மாநிலத்திற்கே சொந்தமானது. முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதன்படி முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளின் உரிமைகளை நாம் இழப்போம். காவிரியில் மத்திய ஆணையம் உத்தரவிட்ட தண்ணீரை ஒரு ஆண்டுகூட முறையாகத் தந்ததில்லை கர்நாடகா. அப்போதெல்லாம் அதில் தலையிடாத மத்திய அரசு இப்போது தலையிடுவது முழுக்க முழுக்க அரசியல். பாஜகவுக்குத் தெரியும், தமிழ்நாட்டில் ஒருபோதும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது என்று. எனவே, கேரளா, கர்நாடகாவில் அரசியல் லாபம் பார்க்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது" என்றார்.

அல்போன்ஸ் கருணானந்தம்

அ.வீரப்பன் சொல்வது உண்மைதான் என்பதுபோலவே, கேரள ஊடகங்கள் இச்சட்டத்தை ஆதரித்து எழுதுகின்றன. "இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், முல்லை பெரியாறு பிரச்சினையில் கேளரத்தின் கை ஓங்கும். முரண்டுபிடித்துவரும் தமிழகம் அடங்கும்" என்று கூறியிருக்கிறார் கேரள பாஜக நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அல்போன்ஸ் கருணானந்தம்.

அணைப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக, விசிக கட்சிகள் மட்டுமின்றி, சீமான், பெ.மணியரசன் போன்ற தமிழ் தேசிய தலைவர்களும் எதிர்க்கிறார்கள். விவசாய சங்கங்களும் ஒரே குரலாக ஒலிக்கின்றன.

ஆனால், வேளாண் சட்டங்களை பஞ்சாப் எப்படி எதிர்த்ததோ, அதே வீரியத்துடன் போராடினால் ஒழிய, இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க முடியாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE