கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் மீனவப் பெண்மணி செல்வம் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, நாகர்கோவிலில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக ஓட்டுநர், நடத்துநர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குமரிமாவட்டம், குளச்சலில் இருந்து வாணியக்குடிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய மீன் சில்லறை வியாபாரி செல்வத்திடம், மீன் நாற்றம் வீசுவதாகச் சொல்லி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர். இதனால் குளச்சல் பேருந்து நிலையத்தில் அழுதபடியே நின்றிருந்த செல்வத்தின் அழுகை சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து செல்வத்தை இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர், புகார் சொல்லியும் கேட்காத நேரக்காப்பாளர் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று(டிச.9) மாலை நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஊசி, பாசி விற்று பிழைப்பு நடத்தும் நரிக்குறவர் குடும்பம் ஒன்று இருந்தது. பேருந்து புறப்பட்டு சிறிதுநேரத்தில் நடத்துநர் டிக்கெட் வழங்க வரும்போது இவர்களைப் பார்த்துவிட்டு, பேருந்தை நிறுத்தி வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்.
இதில் நரிக்குறவர் இணையரும், அவர்களது மகனும் இருந்தார்கள். சிறுவனுக்கு என்ன நடக்கிறது, நாம் ஏன் பேருந்தில் இருந்து இறக்கிவிடப் படுகிறோம் எனத் தெரியாமல் கதறி அழுதான். நரிக்குறவர் பெண்ணோ, அவருக்கான மொழியில் எங்களை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள் என அவலக்குரல் எழுப்பினார். ஆனால், அவர்களது குரலைப் புறக்கணித்து பேருந்து புறப்பட்டது. இதை, அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவுசெய்ய, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுறுத்தலின்படி, நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட பேருந்தின் ஓட்டுநர் நெல்சன், நடத்துநர் ஜெயதாஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
குழுவாகப் பேருந்தில் ஏறிய நரிக்குறவர்கள் தங்களுக்குள் கூச்சல் இட்டதாலேயே இறக்கிவிட்டதாக ,அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அப்படி ‘பேருந்திலிருந்து யாரையும் இறக்கிவிட வேண்டுமானால் அருகிலுள்ள பேருந்து நிலைய நேரக்காப்பாளரிடம் தெரிவித்துவிட்டுத்தான் இறக்க முடியும். யாரையும் நடுவழியில் இறக்கிவிட முடியாது’ என இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.