பிஹாரின் முன்னாள் முதல்வர்களான லல்லுபிரசாத் யாதவ்-ராப்ரி தேவி ஆகியோரின் அரசியல் வாரிசும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் திருமணம் டெல்லியில் இன்று(டிச.9) நடைபெற்றது.
லல்லு-ராப்ரி தம்பதியின் 9 வாரிசுகளில் திருமணமாகாதிருந்த ஒரே வாரிசான தேஜஸ்வியும் தற்போது மண வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
பிஹார் அரசியல்வாதிகளில் மிகவும் இளையவரும், வசீகரம் மிக்கவருமான தேஜஸ்வியை மணக்க பலரும் போட்டியிட்ட நிலையில், தனது நெடுநாள் தோழியான ரேச்சலை அவர் கரம் பற்றியுள்ளார்.
ஜார்கண்ட் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்திருக்கும் லல்லுபிரசாத் யாதவின் உடல்நிலை அண்மையில் மோசமானது. அப்போது குடும்ப நண்பர்களின் வற்புறுத்தலை அடுத்து தள்ளிப்போட்டு வந்த தனது திருமண முடிவுக்கு ஒரு வழியாக சம்மதித்திருக்கிறார் தேஜஸ்வி.
அகிலேஷ் யாதவ் தவிர்த்து அரசியல் பிரபலங்கள் எவரும் திருமண விழாவில் தென்படவில்லை. ஆனபோதும், ராஜவம்சத்தின் இளவரசருக்கு திருமணம் என்பதுபோல பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்றனர்.
கரோனா அச்சம் காரணமாக மிகச்சில நெருக்கமான உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த மணவிழாவின் புகைப்படங்களை தேஜஸ்வியின் சகோதரி ரோஹினி வெளியிட்டுள்ளார்.