'ஃபேஸ்புக் ரைட்டர்' மாரிதாஸ் கைது

By கே.எஸ்.கிருத்திக்

சீமான் ஆதரவு தம்பிகளுக்கு எப்படி நாம் தமிழர் யூடியூப் சேனல் எழுச்சியூட்டுகிறதோ, அதேபோல மோடி ஆதரவு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் வீடியோக்களைப் பதிவு செய்பவர் 'ஃபேஸ்புக் ரைட்டர்' மாரிதாஸ்.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், ‘பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவைத் தடை செய்ய வேண்டும்’ என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய மாரிதாஸ், திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் காரசாரமான குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தார்.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்தது பற்றி காவல் துறையையும், முதல்வரையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வீடியோ ஒன்று வெளியிட்டார். அதேபோல, முப்படைத் தளபதி மரணத்தையும், தமிழக சட்ட ஒழுங்கையும் இணைந்து அவதூறாக ஒரு பதிவு போட்டதாக கூறப்படுகிறது. சர்ச்சையானதும், அவரே அதை நீக்கியதாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இன்று காலை, மதுரை அண்ணாநகர் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையிலான போலீஸ் படையினர், மதுரை சூர்யா நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். போலீஸாரைக் கண்டதும் உடல்நிலை சரியில்லை என்று தன் அறைக்குள்ளேயே பதுங்கிக்கொண்ட அவர், மனைவி மற்றும் குடும்பத்தினர் மூலம் போலீஸாரிடம் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லவைத்தார். ஆனாலும் விடாத போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்த நிலையில், பாஜகவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அங்கு வந்து போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். முறையான சம்மன் கொடுத்து அவரை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.

உதவி ஆணையருடன் சரவணன் வாக்குவாதம்

இதைத் தொடர்ந்து திரும்பிச் சென்ற போலீஸார், பிறகு சம்மனுடன் வந்து அவரை புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "முப்படைத் தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக அரசுக்கு எதிரான கருத்தை, ஆட்சேபகரமான முறையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் மாரிதாஸ். அது மத்திய அரசு, விமானப்படை ஆகியவற்றின் கருத்துக்கு மாறாக அவதூறாக இருந்தது. எனவேதான் கைது செய்தோம்" என்றனர்.

VIEW COMMENTS