விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில், அன்னியூர் சிவா போட்டியிடுவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று விக்கிரவாண்டி இடைதேர்தலில் அன்னியூர் சிவாவை திமுக வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.1971-ம் ஆண்டு,ஏப்ரல் 3-ம் தேதி பிறந்த அன்னியூர் சிவா, பி.ஏ., வரை படித்துள்ளார். 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1989-ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும்,1996-ம் ஆண்டு அன்னியூ கூட்டுறவு வங்கித் தலைவராகவும், 2002-ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராகவும், 2020-ம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளராகவும்,தற்போது விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.
இவர் இதுவரை உள்ளாட்சி தேர்தல் உட்பட மக்களால் தேர்வு செய்யப்படும் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் உள்ளனர்.
» ‘சீன, பாக்., உடனான உறவுகள் வெவ்வேறு!’ - வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெய்சங்கர் விளக்கம்