தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவி!

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி நேற்று (டிச.7) வகுப்புக்குத் தாலியுடன் வந்திருக்கிறார். அதைப் பார்த்த சக மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டது வகுப்பறை முழுக்கப் பரவி, ஆசிரியரின் கவனத்துக்குச் சென்றது. 14 வயதுகூட பூர்த்தியடையாத மாணவி தாலியுடன் பள்ளிக்கு வந்ததால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்தனர்.

தனக்கு ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடந்ததாகவும், விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்திருப்பதாகவும், பெற்றோர்கள் ஏற்பாடு செய்துதான் தனக்குத் திருமணம் நடந்ததாகவும் அந்த மாணவி கூறினார். சிறுமியின் பெற்றோரை விசாரித்தபோது, அந்தத் தகவல் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டனர்.

18 வயதுக்கு கீழேயுள்ள சிறுமிகளுக்குத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், பள்ளி நிர்வாகம் மாவட்ட சமூகநலத் துறைக்குத் தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அந்த மாணவியை மீட்ட சமூகநலத் துறை அலுவலர்கள் அவரை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

சிறுமியின் பெற்றோர், அவருக்குத் தாலி கட்டிய இளைஞர் அருண்பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் மீது குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் மதுரை ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த மாணவி தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சமூகநலத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE