அரூர் அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2 இடங்களில் சாலை மறியல்

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள வேட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக தங்கள் பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் சீராக விநியோகம் செய்யப் படவில்லை எனக் கூறி இன்று காலையில் அரூர் - ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.

கே.வேட்ரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஊர் நாட்டாமை நெடுங்கிளி (58) தலைமையில் சுமார் 100 பேர் நடத்திய சாலை மறியல் போராட்டம் 1 மணி நேரத்துக்கும் மேலா நீடித்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தமன், இளங்குமரன் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அரூர்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் அரூர் ஒன்றியம் கோட்டப்பட்டி அருகே உள்ள தரகம்பட்டி கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இரண்டு நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டு மின்வாரியத்தினர் டிரான்ஸ்பார்மரை சரி செய்ய தருமபுரி கொண்டு சென்றனர். இதற்கு மாற்றாக அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து சிங்கிள் பேஸ் கரன்ட் சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மும்முனை மின்சாரம் இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாக மின்மோட்டார் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் உடனடி மாற்று ஏற்பாடு செய்திடக் கோரி இன்று காலையில், அம்மாபேட்டை செல்லும் மாவட்ட சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த தீர்த்தமலை மின்வாரிய உதவி பொறியாளர் கலையரசன் சம்பவ இடத்திற்குச் சென்று இன்று மாலைக்குள் அந்த கிராமத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE