நன்றி தெரிவிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. நன்றிக்கு உள்ளானவர்கள் அவர்களுக்கு தெரிந்தவிதமாக நன்றியைத் தெரிவிப்பார்கள். அப்படித்தான் நாகப்பட்டினம் பகுதியில் வசிக்கும் ஆதியன் என்னும் பழங்குடியினர், தங்களின் பாரம்பரிய வாத்தியக் கருவிகளை வாசித்து வித்தியாசமான முறையில் தமிழக முதல்வருக்கும், ஜெய் பீம் படக்குழுவினருக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
ஜெய் பீம் திரைப்படம் சமூகத்தில் பல்வேறு தளங்களிலும், பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது. அதில் ஒரு நல்ல விளைவாக, பழங்குடியினர் மீது தமிழக அரசின் பார்வை திரும்பியதைச் சொல்லலாம். அதன்விளைவாக தமிழகம் முழுவதுமுள்ள பழங்குடியினர் குறித்த கணக்கெடுப்பை நடத்தவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இந்த வேலைகள் மாவட்ட நிர்வாகங்களால் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டத்திலும் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பொறக்குடி, நீலப்பாடி, செல்லூர் ஆகிய ஊர்களில் ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டதுடன், தேவையான அடிப்படை வசதிகளையும் செய்திட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால், ஆதியன் பழங்குடியினர் தமிழக அரசுக்கு தங்கள் நன்றிகளை தெரிவிக்க முடிவுசெய்தனர். அதோடு ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையை யதார்த்தமான உண்மையுடன் படமாக்கியிருப்பதற்காக அந்த படக்குழுவினருக்கும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அரசிடம் கோடி ரூபாய் நிதியளித்த சூர்யா-ஜோதிகா தம்பதிக்கும் தங்களது நன்றிகளை தெரிவிக்க முடிவு செய்தனர்.
இன்று (டிச.7) காலை 11 மணி அளவில், நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவுரித்திடலில் மாநில தலைவர் வீரையன் தலைமையில் கூடிய 200-க்கும் மேற்பட்ட ஆதியன் இனமக்கள், தங்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை சுமார் ஒருமணி நேரம் இசைத்து தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
அதன்பின்னர் இப்பகுதியில் ஆதியன் இன மக்களின் மேம்பாட்டுக்காக செயலாற்றிவரும் வானவில் அமைப்பின் தலைவர் ரேவதி தலைமையில் தமிழக முதல்வர், ஜெய் பீம் படக்குழுவினர், சூர்யா-ஜோதிகா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பலரும் உரையாற்றினர். நன்றி அறிவிப்பு கூட்டத்தின் வாயிலாக, தங்களுக்கான ஜாதிச் சான்றிதழ்களையும் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.