ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி?

By என்.சுவாமிநாதன்

மலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குவாரி முதலாளிகள் கூடுதலாகப் பாறைகளை உடைத்துக் கடத்துவது, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கனிமவள முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்ததாலேயே எஸ்பி, மணிவண்ணனும், சார் ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதில் மணிவண்ணன், குமரி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தபோதும் கனிமவளக் கடத்தலைத் தடுத்ததாலேயே இடமாற்றம் செய்யப்பட்டார். ஆட்சி மாறினாலும் இந்தக் காட்சி மாறவில்லையே என தென்மாவட்ட மக்களின் குரல் ஒலிக்கிறது.

குவாரிகளால் பரிதாப நிலையில் மலைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பலவற்றை, திமுக பிரமுகர்களே தங்கள் பினாமிகளின் பெயரில் நடத்திவருகின்றனர். பொதுவாகவே குவாரிகளில் கல் உடைத்து, வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல கனிமவளத் துறையிடம் இருந்து நடைச்சீட்டு பெற வேண்டும். ஆனால், ஒரே எண் கொண்ட நடைச்சீட்டை வைத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட விடிய, விடிய பாறைகளை உடைத்துக் கடத்துவது தொடர்ந்து வருகிறது.

குவாரிகளில் பாறைகள் மித மிஞ்சி உடைக்கப்படும்போது, குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவிலான வெடிமருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுப்பகுதி கிராம மக்கள், தங்கள் வீடுகளில் நில அதிர்வுக்கு ஆளாவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். நெல்லைமாவட்டம், சீலாத்திகுளத்தில் கல் குவாரியில் வெடி வைத்ததில், அருகாமையில் இருந்த ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது.

மணிவண்ணன்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனை நடத்தி லாரிகளை பறிமுதல் செய்தார். இருக்கன்துறை பகுதியில் உள்ள ஒரு குவாரியில் அளவுக்கு அதிகமாகக் கனிமம் வெட்டிக் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குவாரிக்கு ரூ.20 கோடியே 11 லட்சத்து 64,352 அபராதமும் விதிக்கப்பட்டது. சார் ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தியோடு சேர்ந்து நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்த மணிவண்ணனும் கடத்தல் லாரிகளைப் பிடித்தார். கையோடு, குவாரி முதலாளிகள் பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே சார் ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தியும், எஸ்பி மணிவண்ணனும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எஸ்பி மணிவண்ணன் இயற்கை ஆர்வலரும்கூட. தான் பணிரீதியாக செல்லும் மாவட்டங்களில் எல்லாம் முகாம் இல்லத்திலேயே வீட்டுத்தோட்டம் அமைப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டுவது, சுற்றுச்சூழல் காப்பு பணிகளை முன்னெடுப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். கடந்த 2015-ம் ஆண்டு, குமரி மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது, மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜனோடு சேர்ந்து கனிமவளக் கடத்தல் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிதாக கல்குவாரிகள் அமைப்பவர்கள், மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி அனுமதி பெறாத பட்டியலில் இருந்த 28 குவாரிகளுக்கு செயல்படத் தடைவிதித்ததோடு, அந்தக் குவாரிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதமும் விதித்தார் நாகராஜன். அந்தப் பணியிலும் கனிமக் கடத்தல் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுத்தார் மணிவண்ணன். ஆனால், அடுத்த சிலநாட்களிலேயே இருவருமே இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை எஸ்பி சரவணன்

குமரியில் நாகராஜனுக்குப் பின்பு ஆட்சியராக வந்த சஜ்ஜன்சிங் சவான், மூடப்பட்ட அனைத்து குவாரிகளுக்கும் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தார். முந்தைய ஆட்சியர் குவாரிகளுக்கு விதித்த அபராதத் தொகையும் வசூல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக செய்திக்காக அப்போது ஆட்சியராக இருந்த சஜ்ஜன்சிங் சவானை சந்திக்க முயன்றபோது, ‘குவாரி விசயம் பற்றி மட்டும் கேள்விகள் இருக்கக் கூடாது’ என்னும் நிபந்தனையோடே, ஆட்சியருடனான நேர்காணலுக்கு அனுமதி கிடைத்ததை ஊடகவியலாளராக நாமே எதிர்கொண்டிருக்கிறோம்.

அதேபோல் நேற்று(டிச.6) நெல்லை மாவட்ட புதிய எஸ்பியாக பொறுப்பேற்ற சரவணன், செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவர் பதவியேற்கும் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. கல்குவாரி, கனிமவளக் கடத்தல் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பக்கூடும் என்பதாலேயே, எஸ்பி சரவணன் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததாக மூத்த ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் எஸ்பி தரப்பிலோ, ‘கரோனா விதிமுறைகள் அமலில் இருக்கிறது. கூட்டம் சேர்க்க வேண்டாமே என்பதால் தான் இந்த ஏற்பாடு!’ என சொல்கிறார்கள்.

கனிமங்கள் எங்கே செல்கின்றன?

குமரிமாவட்டத்தில் மட்டும் இப்போது 49 குவாரிகள் இயங்கிவருகின்றன. குமரியிலும், நெல்லையிலும் குவாரிகளில் உடைக்கப்படும் கனிம வளங்கள் கேரளத்துக்குச் செல்கின்றன. மலைகளில் சிலவற்றைப் பாதுகாக்கப்பட்ட மலைகளாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதுபோக சில மலைகள் மலையிடு பாதுகாப்பு குழுமத்தின்கீழும் உள்ளன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கனிமவளத் துறையிடம் இருந்து நடைச்சீட்டு பெற்றுக்கொண்டு இஷ்டத்துக்கு உடைக்கின்றனர். அதேபோல், குவாரிகளில் கனிமவளங்கள் அனுமதி பெறப்பட்ட அளவுக்குத்தான் உடைக்கப்படுகிறதா என்பதைக் கனிமவளத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பல மாவட்டங்களிலும் கனிமவளத் துறைக்கு சொந்தமாக ஜீப் வசதி கூட செய்துகொடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் குவாரிகளில் மிதமிஞ்சிக் கடத்தப்படும் கனிமவளங்கள், கேரளத்தில் நடந்துவரும் விழிஞ்சம் துறைமுகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேநேரத்தில் கேரளத்தில் மலைகளில் குவாரிகள் அமைக்கத் தடை அமலில் உள்ளது. தமிழகத்தில் அனுமதியோடு கொஞ்சமும், முறைகேடாக டன் கணக்கிலும் கேரளம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன கனிமவளங்கள். அதைத் தடுக்க நினைக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் காட்சிகள், ஆட்சி மாறினாலும் மாறாத காட்சியாகத் தொடர்வது பெரும் வேதனையே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE