பாகிஸ்தானியர்களின் கொலை வெறி - இலங்கையில் கொந்தளிப்பு

By கே.எஸ்.கிருத்திக்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி, பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கை நாட்டவரான பிரியந்த குமாரா தியாவதானா சித்ரவதை செய்து, எரித்துக் கொல்லப்பட்டார்.

கொலை நடந்தது கடந்த 3-ம் தேதி என்றாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் இலங்கையில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. காரணம், வன்முறைக் கும்பலால் பிரியந்த குமாரா சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் அவர் உடல் முழுக்க இருப்பதாகவும், ஒரு காலைத் தவிர அவரது உடலில் உள்ள பெரும்பாலான எலும்புகள் அடித்தே உடைக்கப்பட்டிருப்பதாகவும், தாக்குதலில் உள்ளுறுப்புகள் பல செயல் இழந்திருந்தாலும்கூட மண்டை ஓட்டிலும் தாடையிலும் ஏற்பட்ட எலும்பு முறிவே அவரது மரணத்துக்குக் காரணம் என்றும், தீவைக்கப்பட்டதில் அவரது உடலில் 99 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், பொறியாளராகப் பணியாற்றிவந்தார் கொல்லப்பட்ட பிரியந்த குமாரா. தனது அலுவலக அறைக்கு அருகே ஒட்டியிருந்த கட்சி சுவரொட்டி ஒன்று, கிழிக்கப்பட்டு அருகில் உள்ள குப்பைக்கூடையில் கிடந்தது. அதை அவர் தான் கிழித்ததாக, அவருக்கு வேண்டாத சிலர் பரப்பினார்கள். அது பாகிஸ்தானில் தீவிரமாக இயங்கும் மத அடிப்படைவாத அமைப்பான தெஹ்ரீக் ஏ லப்பை பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சியின் போஸ்டர். புனித நூலான குரானின் வசனங்கள் இடம்பெற்றிருந்த போஸ்டரை கிழித்ததன் மூலம், அவர் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார் என்றும் பரப்புரை செய்யப்பட்டதால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் பிரியந்த குமாராவை அடித்து வெளியே இழுத்துவந்து சித்ரவதை செய்து, குற்றுயிராகக் கிடந்த அவரைத் தீவைத்துக் கொன்றது.

இலங்கையில் போராட்டம்.

இலங்கையில் கொந்தளிப்பு

இந்தச் சம்பவம் இலங்கையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 3 நாட்களாக அந்நாட்டின் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இதுதொடர்பான செய்திக்கே முக்கியத்துவம் கொடுத்துவெளியிட்டு வருகின்றன. இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இறந்த பிரியந்த குமாராவின் வீட்டுக்கே சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். கொலைக்குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், அவர்களை நாட்டுக்கே திரும்ப அழைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பல அமைப்புகள் இந்த விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அறிக்கை வெளியிடுவதுடன், ஆர்ப்பாட்டமும் நடத்திவருகின்றன.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்று நமக்கு பாகிஸ்தான் பிரதமரும், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் உறுதி அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருக்கிறார். கூடவே, கொல்லப்பட்ட பிரியந்த குமாராவின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவது தொடர்பாக, பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் சிறுமி...

இந்தச் சம்பவத்தால் புத்த மதவாதிகள், கோபமடைந்திருக்கிறார்கள். ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக இருக்கும் புத்த பிக்கு ஞானசார தேரர், இஸ்லாமிய தீவிரவாதம் உலகில் உள்ள மற்ற எல்லா தீவிரவாதத்தையும்விட பயங்கரமானதாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் மாறியுள்ளது என்று கூறியிருக்கும் அவர், கூடவே இலங்கையில் தலைதூக்கிவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் ஒடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் அமைப்புகளோ, இதைவிட கொடூரமான செயல்களை இலங்கையில் சிங்கள புத்த மதவாதிகள் செய்துவருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதேநேரத்தில், பாகிஸ்தானில் ஜனநாயக அமைப்புகள் பலவும் இலங்கை பொறியாளருக்காக களமிறங்கிப் போராடுகின்றன. அவரது படத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இலங்கையிடம் மன்னிப்பு கேட்கும் பதாகைகளுடன் இஸ்லாமிய பெண்களும், குழந்தைகளும்கூட அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE