2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் திறப்பு விழா, நாளை (டிச.7) நடக்கிறது. பிரதமர் மோடி கலந்துகொண்டு இதைத் திறந்து வைக்கிறார். ஆனால், 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கான நிதி கூட ஒதுக்கப்படவில்லை.
இதோ... அதோ... என்று செய்தியாக மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக, தோப்பூரில் 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டு, அந்த நிலத்தில் 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளதோடு, இத்திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இந்த மருத்துவமனையைக் கட்ட ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தம் 26.03.21 அன்று கையெழுத்தாகி உள்ளது.
ஜைக்கா நிறுவனம் 82 சதவீத நிதியும், 18 சதவீத நிதியை மத்திய அரசும் வழங்கும். வெளிநாட்டு நிதி உதவியுடன் மதுரை எய்ம்ஸ் செயல்படுத்தப்படுவதால், நிதி ஆதாரத்துக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஆனால், இந்த நிதி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதே, கட்டுமானப்பணி தாமதமாக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பாண்டியராஜா என்பவர், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ திட்டத்தில் நிர்வாகப் பிரிவு, நிதிப் பிரிவு, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்காணல் விரைவில் நடத்தப்படுகிறது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமாக ஒரு வருட காலத்துக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட பணியிடங்கள் அனைத்தும் ஒப்புதல் கிடைத்தபின்பே நடைமுறைப்படுத்தப்படுன்றன.
மருத்துவமனைக்கு மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் போன்று 360 பணியிடங்கள் உருவாக்குவதற்கு, 08.06.21 அன்று முன்மொழியப்பட்டு செயல் வடிவத்தில் உள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கீடு செய்வது சம்பந்தமான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ்க்கு வங்கிக் கணக்கு புதுச்சேரி ஜிப்மரில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸுக்கு தனியாக நிதி அலுவலர் நியமிக்கப்படும் வரை. இந்தக் கணக்கை ஜிப்மர் அதிகாரிகளே பராமரிப்பார்கள்.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் தற்போதைக்கு புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் ஆய்வகம், மருந்தகம் உள்ளிட்டவை மதுரை எய்ம்ஸுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்காலிக கட்டிடங்கள் அமைத்து செயல்படுத்தலாம் என 16.07.21 மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது, எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்காக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் கல்லூரிகள் 40 கிமீ தொலைவுக்குள் இருந்தால்தான், மதுரை எய்ம்ஸ் தற்காலிக கட்டிடங்களுக்கு வந்து மருத்துவ சேவைகளைப் பார்த்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மருத்துவ மாணவர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்க இருக்கிறது.
புதுச்சேரி ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மதுரை எய்ம்ஸ் தற்காலிக கல்லூரி தொடங்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான தற்காலிகச் சேர்க்கையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக, அக்கூட்டத்தில் தமிழக அரசுடன் விரைவில் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை மேற்கொள்ள, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவருமான கட்டோச்சி தலைமையில் 11 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு, ராஜேஷ் பூஷன் தலைமையில் 7 பேர் கொண்ட நிதிக் குழு, காமேஸ்வர பிரசாத் தலைமையில் 7 பேர் கொண்ட தேர்வுக் குழு, சுதா சேஷய்யன் தலைமையில் 7 பேர் கொண்ட கல்வி அமைப்புக் குழு, பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழு, விஜய் லட்சுமி சக்சேனா தலைமையில் 4 பேர் கொண்ட மனிதவள மேம்பாட்டுக் குழு என்று பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.