அதிமுக பொதுச் செயலாளரானதில் இருந்து, ஜெயலலிதா களையெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள். ஆர்.எம்.வீ, எஸ்.டி.எஸ்., திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன், தாமரைக்கனி, முத்துசாமி என பட்டியல் நீளும். ஒருவர் எஞ்சியிருந்தார் என்றால், அது அன்வர் ராஜா.
18 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயலலிதா ராமநாதபுரம் வந்தபோது எம்ஜிஆர் படம் மட்டுமே ஒட்டிய காரில் அவரை வரவேற்கப் போனவர் அன்வர் ராஜா. அப்போது படத்துடன் இந்தச் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையானது. அத்தனை தீவிரமான எம்ஜிஆர் பக்தர் அன்வர் ராஜா. அமைச்சரான பிறகும்கூட, "இன்று எம்ஜிஆர் நினைவு நாள். இன்று அன்வர் ராஜா யார்கிட்டேயும் பேச மாட்டார்; மவுன விரதம்" என்று சக செய்தியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அமைச்சராக இருந்து சம்பாதித்த பணத்தில் பள்ளி, கல்லூரிகளைத் தொடங்கியபோதுகூட, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில்தான் நடத்தினார் அன்வர் ராஜா. சமீப காலத்தில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளை கவனித்தால்கூட தெரியும், அவர் ஜெயலலிதாவை விட அதிகமாக எம்ஜிஆர் புகழ்பாடுகிறவர் என்பது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜாவை பேட்டிக்காகத் தொடர்புகொண்டு தோற்றபோது, ராமநாதபுரத்து அதிமுகவினர் சிலரிடம் பேசினேன். "அவரை நாங்களே பார்க்க முடியல சார். வீட்டுக்குள்ளேயே அமைதியா இருக்கார். எம்ஜிஆர் பக்தர்கள் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு உள்ளாவதையே அவமானமாகக் கருதுவார்கள். கேவலம், எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எப்படிச் சகித்துக்கொள்வார்?" என்றார் ஒருவர்.
வாயால் கெட்டார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று ராமநாதபுரம் அதிமுகவினர் பலரிடம் கேட்டபோது, எல்லோரும் சொன்ன பொதுவான அம்சம், "அமைச்சர் மணிகண்டனைப் போலவே வாயால் கெட்டார்" என்பதுதான்.
"ஒன்றிய செயலாளர், யூனியன் சேர்மன், எம்எல்ஏ, அமைச்சர், மாவட்ட செயலாளர், எம்.பி, வக்பு வாரியத் தலைவர் என்று அதிமுகவில் அதிகப் பதவிகளை வகித்தவர் அன்வர் ராஜா. எம்ஜிஆர் காலத்து ஆள் என்பதால், கட்சியின் சீனியர் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.
முதல்வரான பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக ராமநாதபுரம் வந்தபோது, அன்வர் ராஜாவிடம் விளம்பரம் கேட்கப் போனார்கள் பத்திரிகையாளர்கள். ‘ஏம்பா... எடப்பாடி ஜூனியரு. சீனியரான நான் அந்த விழாவில் பங்கேற்கிறேன் பாருங்க, அதுதான் அவருக்குப் பெருமை. வேணுமின்னா அன்வர் ராஜாவை வரவேற்று பழனிசாமிகிட்ட விளம்பரம் கேளுங்க’ என்று வேடிக்கையாகவோ, சீரியஸாகவோ சொன்னார் அன்வர்ராஜா.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது அன்வர் பாய்க்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதை ஒருங்கிணைப்பாளர்களிடம் பலமுறை சொல்லிவிட்டார். அது எங்களுக்குத் தெரியாதா, சட்டச் சிக்கல் இருப்பதால்தான் அவர்களுக்கு இணக்கமாகச் செல்ல வேண்டியதிருக்கிறது என்று அவர்கள் விளக்கமளித்த பிறகும், திரும்பத் திரும்ப வலியுறுத்தினார் அன்வர் ராஜா.
முதலில், கட்சி மீதான அக்கறையில்தான் இப்படிப் பேசுகிறார் என்று நினைத்தவர்களுக்கு அப்புறம்தான் தெரிந்தது, அன்வர் அவைத் தலைவர் பதவிக்காகவே நமக்கு நெருக்கடி கொடுக்கிறார் என்பது. அதனால் அவரை நாசூக்காக தவிர்த்தார்கள். அவர்களை வழிக்கு கொண்டுவருவதற்காக சசிகலாவை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார் அன்வர் ராஜா. ஊடகங்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்று நன்றாகத் தெரிந்தவரே இப்போது இப்படிப் பேசுகிறார் என்றால், அவைத் தலைவர் பதவிக்காக எதற்கும் துணிவார் என்று புரிந்துகொண்ட பிறகே, அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.
கூடவே, அவர் எந்த அடையாளத்தை முன்னிறுத்தி அவைத் தலைவர் பதவிக்கு அடி போட்டாரோ, அந்தப் பதவிக்கு அதே இஸ்லாமியரை நியமித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். இதை அன்வர் எதிர்பார்க்கவே இல்ல. அதுவும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை" என்கிறார்கள்.
திமுகவுக்குப் போய்விடுவாரோ என்று அவர்களிடம் கேட்டபோது, "அவரது நாடி நரம்பு ரத்தம் எல்லாம் எம்ஜிஆர்தான் இருக்கிறார். அவரால் அப்படி திமுகவுக்குப் போக முடியாது. அப்படிப் போவதாக இருந்தால் தேர்தல் நேரத்தில், ராஜ கண்ணப்பன் இழுத்தபோதே போயிருப்பாரே" என்கிறார்கள். முன்பு சசிகலாவால்தான் அமைச்சர் பதவி இழந்தார் என்றாலும், சமீப காலமாக சசி ஆதரவாளராகவே அன்வர் இருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். சிறையிலிருந்து விடுதலையான சசிகலாவைச் சந்திக்க, அன்வர் ராஜா அப்பாயின்மென்ட்டும் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலோபர் கபில் நீக்கம்
ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அன்வர் ராஜாவுக்கும், மாவட்ட அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையே மோதல் இருந்ததைப் போலவே, நிலோபர் கபிலுக்கும் மாவட்ட அமைச்சர் வீரமணிக்கும் இடையே மோதல் இருந்தது. தனக்கு சீட் கிடைக்காததற்கு வீரமணி தான் காரணம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர்விட்டு அழுததுடன், திமுக துரைமுருகனுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் நிலோபர். இதற்காக நடவடிக்கை எடுத்ததாகக் காட்டிக் கொள்ளாமல், ‘வேலை வாங்கித்தருவதாக ரூ.8 கோடி அளவுக்கு கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார்’ என்ற புகாரை வைத்து, நிலோபரை கட்சியைவிட்டு கட்டம்கட்டிவிட்டது அதிமுக தலைமை.
ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை ஆதரித்ததுடன், பாஜகவின் கிளை இயக்கம்போலவே கட்சி நடத்துவதாக சிறுபான்மையினரின் அதிருப்தியை அதிமுக சம்பாதித்திருந்த நிலையில், நிலோபர் கபில், அன்வர் ராஜாவின் நீக்கம் அந்த குற்றச்சாட்டுக்கு வலிமை சேர்த்தது. அதன் தாக்கத்தைக் குறைக்க, தமிழ்மகன் உசேனை தற்காலிக அவைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.
அதிமுகவின் இந்த முயற்சி பலன் தருமா என்று எழுத்தாளர் எச்.பீர்முகம்மதுவிடம் கேட்டபோது, "ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமியர்கள் திமுக ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். எம்ஜிஆரின் வருகையால் கொஞ்சம் மாறினார்கள். என்றாலும், பெரும்பாலானவர்கள் திமுகவையே ஆதரித்தார்கள். பாஜக கூட்டணியில் சேர்ந்தபோதுதான் முதன்முறையாக இஸ்லாமியர்கள் திமுகவை கைவிட்டார்கள். ஜெயலலிதா இருந்தவரையில் இஸ்லாமியர்கள் அதிமுகவையும் ஆதரித்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவை பாஜகதான் பின்னிருந்து இயங்குகிறது என்பது பட்டவர்த்தனமான பிறகு, ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள். 2021 சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் 95 சதவீத இஸ்லாமியர்கள் திமுகவுக்கே வாக்களித்தார்கள். தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக்கி இருப்பதால் மட்டுமே, அதிமுக மீது இஸ்லாமியர்களுக்கு நல்லெண்ணத்தைத் தந்துவிடாது. பாஜக கூட்டணியைவிட்டு விலகி, அதற்கு நேர்மாறான அரசியல் நிலைப்பாட்டை எடுக்காதவரை அதிமுகவால் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறவே முடியாது" என்றார்.
இப்போதுள்ள நிலையில் அத்தனை துணிச்சல் அதிமுக தலைவர்களுக்கு வருமா?