சொல்லவும் செய்யவும் மறந்த ஜெயலலிதா!

By டி. கார்த்திக்

எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா வரை கடும் உழைப்புடன் கட்டிக் காக்கப்பட்ட கட்சியான அதிமுக குறித்து எதிர்மறையான செய்திகளாகவே வருகின்றன. ஜெயலலிதா நினைவுநாளான இன்று அவருக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்துவதைக்காட்டிலும், அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதிலேயே அதிமுகவின் தற்போதைய தலைமை தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு வகையில் ஜெயலலிதாவும் காரணம் என்பதை மறுக்க முடியாது. “எனக்குப் பின்னும் நூறு ஆண்டுகள் கட்சி இருக்கும்” என்று முழங்கிய ஜெயலலிதா செய்ய மறந்தது என்ன?

எம்ஜிஆர் காலத்தில் அதிமுக தொண்டர்களுக்கு ராமாவரம் எப்படியோ, அதுபோலத்தான் ஜெயலலிதா காலத்தில் போயஸ் கார்டன். ஜெயலலிதா இருந்தவரை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ ஒவ்வொரு அதிமுக தொண்டருக்கும் கோயில் போன்றது. ஆனால், அந்த வேதா நிலையம் இன்று அதிமுக தொண்டர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களின் நினைவு இல்லங்கள் மக்கள் சென்று பார்க்கும் இடங்களாக இருக்கின்றன. அந்தத் தலைவர்களின் நினைவைப் போற்றும் இடங்களாக உள்ளன. தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லமும் மருத்துவமனையாகவும் நினைவு இல்லமாகவும் மாறலாம். ஆனால், சுமார் 30 ஆண்டுகள் அதிமுகவின் முகமாக இருந்த ஜெயலலிதாவின் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாறுவது நீதிமன்றத்தின் (மேல்முறையீடு வழக்கைப் பொறுத்து) கையில்தான் உள்ளது.

எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோதே, தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டிருந்தார். ‘அரசுக்கு இந்தச் செலவைத் தவிர்த்திட தன்னுடைய வீட்டையே நினைவு இல்லமாக ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்த எம்ஜிஆர், தான் அலுவலகமாகப் பயன்படுத்திய வீட்டை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்புச் செலவுக்காகவும், காவல் காப்பது போன்ற பணிகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்துவரும் வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். ராமாவரம் தோட்டம் இல்லத்தை ஜானகிக்கும் உறவினர்களுக்கும் உயில் எழுதிவைத்தார்.

அதன்படியே, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு எம்ஜிஆர் நினைவு இல்லம் உருவானது. அண்ணா, காமராஜர் நினைவு இல்லங்களை அரசு பராமரித்துவரும் நிலையில், எம்ஜிஆர் நினைவு இல்லத்தை அரசு நிர்வகிக்கவில்லை. அந்த அளவுக்கு மரணத்துக்கு முன்பே எம்ஜிஆர் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். இங்கே ஜெயலலிதா பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிடலாம். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்ற வேதவள்ளி, தந்தை ஜெயராமன், சகோதரர் ஜெயக்குமார் ஆகியோர் அதிக காலம் வாழவில்லை.

ஒருமுறை இதுபற்றி ஜெயலலிதா பேட்டியிலும் குறிப்பிட்டிருந்தார். “எங்கள் வீட்டில் 60 வயதை ஒருவர்கூட எட்டவில்லை. நான் மட்டும்தான் 60 வயதைக் கடந்திருக்கிறேன். எனவே, எனக்கு ஒவ்வொரு ஆண்டுமே போனஸ் வாழ்க்கைதான்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பார்த்தால், 60 வயதுக்குப் பிறகே ஜெயலலிதா, எம்ஜிஆர் போல முடிவுகளை எடுத்திருக்கலாம். அதுபோலவே, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதா வந்த பிறகான 2 ஆண்டு காலத்திலும் ஜெயலலிதா உடல்நிலை குன்றிதான் இருந்தார். ஆனாலும், அப்போதும் எந்த முன்முயற்சியிலும் ஜெயலலிதா இறங்கவில்லை.

அடுத்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள்தான் அதிமுக பிரிந்துகிடந்தது. 1989 தேர்தலுக்குப் பிறகு ஒற்றைக் குறிக்கோளில் அதிமுக ஒருங்கிணைந்தது. ஒற்றை ஆளுமையாக ஜெயலலிதா உருவெடுத்தார். ஆனால், ஜெயலலிதா மறைந்து 5 ஆண்டுகள் ஆகியும் அதிமுகவில் அணி மனப்பான்மை ஓயவில்லை. இன்னொரு பக்கம் சசிகலா, டிடிவி தினகரன் எனக் குடைச்சல்கள் தொடர்கின்றன. தொடர் தோல்விகளால் அதிமுக துவண்டு கிடக்கிறது. 1989-ல் ஜெயலலிதா ஒற்றை ஆளுமையாக உருவெடுக்கக் காரணம், 1984 தேர்தல். எம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த வேளையில், அந்தத் தேர்தலில் ஜெயலலிதா செய்த சூறாவளிப் பிரச்சாரமும் ஒரு காரணம். அன்று ஜெயலலிதாவுக்குப் பல இடைஞ்சல்கள் இருந்தபோதும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா பம்பரமாகச் சுழன்றார். இவையெல்லாம் தொண்டர்கள் ஜெயலலிதாவை ஏற்க பின்னாளில் காரணமானது.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அப்படி ஒருவர் ஏன் உருவாகவில்லை? 2001, 2014 என ஜெயலலிதா இருமுறை முதல்வர் பதவியை இழக்க நேர்ந்த காலத்தில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஜெயலலிதா உயிருடன் இருந்த இந்தக் காலகட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் பெயருக்குத்தான் முதல்வராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டார். 2002-ல் அவர் தலைமையிலான அரசு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதைக்கூட ஒத்திவைத்தார்கள். 2014-ல் ‘மக்களின் முதல்வர்’ என்ற பதத்தை உருவாக்கி, முதல்வர் ஓபிஎஸ் என்பதையே மறக்கடித்தார்கள். இதுபோன்ற காரணங்களால் ஜெயலலிதாவுக்குப் பிறகு, ஒரு தனித்த தலைவரை அடையாளம் காணமுடியாமல் போனது. அதற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் ஓபிஎஸ் முதல்வரானார். அப்போதும், அவருக்குக் குழிபறிப்புகள் தொடர்ந்தன. அவர் பதவியிலிருந்து விலகக் காரணமாக இருந்தது, ஜெயலலிதாவால் வெளியே - உள்ளே என இருந்த சசிகலா தரப்பு. அந்த முடிச்சிலிருந்து தொடங்கியது சசிகலா - ஓபிஎஸ் மோதல். பிறகு, அது சசிகலா - ஓபிஎஸ் - ஈபிஎஸ் என்று முக்கோண மோதலானது. இன்று அதிமுக இணைந்திருந்தாலும் அணி மனப்பான்மை ஓயவில்லை. கட்சியின் நலன் கருதி சசிகலா உட்பட எல்லோரும் ஒன்றிணைய முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோதே ஒருவரைத் துணிந்து அடையாளப்படுத்தியிருந்தால், இன்று அதிமுகவுக்கு இந்த நிலை இல்லாமலும் போயிருக்கலாம். ஆக, ஜெயலலிதா சொன்னது போல நூறாண்டுகள் கடந்தும் அதிமுக நிற்க வேண்டுமென்றால், அதிமுகவினர் கடந்த காலப் படிப்பினையைப் பாடமாகப் படிக்க வேண்டும். இனியாவது படிப்பார்கள் என்று நம்புவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE