நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது கட்சி ஜனநாயக முறைப்படிதான் நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்ட, முறைப்படி உட்கட்சித் தேர்தல்களை நடத்துவது வழக்கம். அதன்படி, டிச.7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அப்பதவிக்குப் போட்டியிட விரும்புவோர், டிச.3, 4 தேதிகளில் அதிமுக தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் பெற்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று(டிச.3) சென்னை, ஓட்டேரி, பாஷ்யம் ரெட்டி முதல் தெருவைச் சேர்ந்த முதியவர் ஓம்பொடி பிரசாத் சிங்(71), ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பம் வாங்க அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். இவர் பல ஆண்டுகளாக அதிமுக உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முறையாகப் பணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைக் கேட்டுள்ளார் பிரசாத் சிங். அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் விண்ணப்பப் படிவம் தர மறுத்ததுடன், அவரை ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரசாத் சிங் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் நியாயம் கேட்டபோது, சிலர் அவரைத் தாக்கி வெளியே தள்ளியிருக்கின்றனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த பிரசாத் சிங், இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தூண்டுதல் பேரிலேயே தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு காரணமான அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் மற்றும் மனோகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகரன் உட்பட 10 பேர் மீது கலகம் செய்தல், முறையற்று தடுத்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.