சென்னை: தென்மேற்கு பருவமழை சென்னையில் பெய்து வரும் நிலையில் கொசு உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறதா என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இயற்கையாகவே கொசுத் தொல்லையும், உற்பத்தியும் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்தஜூன் 1 முதல் 9-ம் தேதி வரை வழக்கமாக 16 மிமீ மழை மாநகருக்குக் கிடைக்கும். ஆனால் இந்த முறை 65 மிமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம். இதன் காரணமாக சென்னையில் மீண்டும் கொசுக்கள் பெருக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக தொடர்ந்து மழை பெய்தால், கொசுக்கள் பெருகத் தொடங்கும். பருவமழைக்கு முன்பாகவே, மாநகரம் முழுவதும் வீடு வீடாகவும், காலி இடங்களிலும் சோதனை நடத்தி கொசு உற்பத்தி ஆதாரங்களான தேங்காய் கழிவுகள், பயன்படுத்தாத டயர்கள், நீர் தேங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அகற்றி இருக்கிறோம். இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், அனைத்து பள்ளிகளை சுற்றியும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றப்பட்டு, புகை பரப்பப்பட்டுள்ளன.
குடியிருப்பு பகுதிகளிலும் தேவையான இடங்களில் கொசு புகை மருந்து பரப்பப்பட்டு வருகிறது. மாநகரம் முழுவதும் கொசுத்தொல்லை மற்றும் அதனால் பரவும் நோய்களால் யாரேனும் பாதிக்கப்படுகின்றனரா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
» தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் நியமனம்
» பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுக தோல்வியை தழுவியது: மதுரை ஆதீனம் கருத்து
கொசு ஒழிப்பு பணிக்கென 410 கை தெளிப்பான்கள், 109 விசை தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் 287 தெளிப்பான்கள், கையினால் இயங்கும் புகைப்பரப்பும் 219 இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 68 புகைப்பரப்பும் இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. கால்வாய்களில் கொசு உற்பத்தி அதிகரிக்கிறதா எனவும் கண்காணித்து வருகிறோம் அங்குகொசு மருந்துகளைத் தெளிக்க 6 ட்ரோன்களும் தயாராக உள்ளன.
பொதுமக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்கும் பொருட்களை அகற்றவேண்டும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் நீர் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்