நம்பவச்சு ஏமாத்திட்டீங்களே மோடி ஜி!

By காமதேனு

அன்புக்குரிய பிரதமர் அவர்களே,

உங்கள் பாசத்துக்குரிய நாட்டு மக்களில் ஒருவன், நீங்கள் இந்தப் பதவிக்கு வரவேண்டுமென வாக்களித்த இளைஞன் ஒருவன் எழுதும் கடிதம் இது.

வணக்கம்.

கல்லூரியில் படிக்கையில்தான் எனக்கு பாஜக அறிமுகம். இருமுறை பாஜக ஆட்சி கவிழ்ந்து, பொதுத்தேர்தல் வந்த நேரம். நெல்லையில் பாஜகவின் தேர்தல் விளம்பரம் ஒன்றைக் கண்டேன். ‘முதலில் 13 நாட்கள் ஆட்சி... பிறகு 13 மாதங்கள்... இனி 13 ஆண்டுகள்... அடுத்து 13 யுகங்கள் பாஜக ஆட்சி!’ என்று அதில் குறிப்பிட்டிருந்தது. எதிர்பார்த்தபடியே மீண்டும் பாஜக ஆட்சியே அமைந்தது. ஓரளவு நல்லாட்சி நடத்திய வாஜ்பாய், தொடர்ந்து 13 ஆண்டுகள் மத்தியில் ஆள்வார் என்றே நானும் நம்பினேன். ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி முடிவுக்குவந்தது.

அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில், மெகா ஊழல்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தவறான அணுகுமுறை எல்லாமே எனக்கு காங்கிரஸ் மீது வெறுப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் ஆட்சி செய்திருந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர முடியாதா என்று ஏங்கினேன். 2014 மக்களவைத் தேர்தல் நேரத்தில், உங்கள் கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் நிதின் கட்கரி மதுரையில் ஒரு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டையொட்டி பாஜக ஆளும் மாநிலங்கள் எப்படி வளர்கின்றன, நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதைக் காட்டும் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. குஜராத் மாநிலம் குறித்த கண்காட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்ததோடு, வளர்ச்சியின் நாயகன் மோடிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்றும் அறிமுகப்படுத்தினார்கள். அப்பாடா... ஒரு மீட்பர் வந்துவிட்டாரென்று மகிழ்ந்தேன். என்னைப் போலவே நிறைய இந்தியர்கள் கருதியிருக்கிறார்கள் என்பது, உங்கள் வெற்றிக்குப் பிறகு உறுதியானது.

காங்கிரஸ் செயல்படுத்திவந்த ஐந்தாண்டுத் திட்டத்தை மாற்றினீர்கள், பட்ஜெட் தேதியை மாற்றினீர்கள், பல திட்டங்களின் பெயர்களை மாற்றினீர்கள். எப்படியோ நல்லது நடந்தால் சரி என்றுதான் நினைத்தேன். பல நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. நான் உட்பட என்னைச் சுற்றி உள்ள பலரின் பொருளாதார நிலை உயர்வதாக எனக்குத் தோன்றியது. அத்தனைக்கும் காரணம், பாஜக ஆட்சிதான் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு, நண்பர்கள் எல்லாம் தங்கள் ஆட்சியைக் குறைசொல்ல ஆரம்பித்தார்கள். தனிப்பட்ட முறையில், அத்தனை பேருக்கும் வந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு உங்கள் அரசின் தவறான போக்குதான் காரணம் என்றார்கள். நான் நம்பவில்லை. 2016 நவ.8-ம் தேதி இரவோடு இரவாக நீங்கள் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தந்தது. எப்படியும் உங்கள் அறிவிப்பால், எல்லா முதலாளிகளும் பதுக்கி வைத்திருக்கிற கறுப்புப் பணமெல்லாம் செல்லாமல்போய்விடும், வறுமையற்ற புதிய இந்தியா பிறந்துவிடும் என்றெல்லாம் கற்பனை செய்தேன். ஆனால், எல்லாமே பொய் என்பதை சேகர் ரெட்டி போன்ற பெரும் செல்வந்தர்கள் வீட்டில், மலைமலையாகச் சிக்கிய புத்தம்புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் உணர்த்தின.

அப்போதும்கூட உங்கள் மீது கோபம் வரவில்லை. நல்ல திட்டம், செயல்படுத்தியதில்தான் கோளாறு என்றே நினைத்தேன். அடுத்து ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்தீர்கள். நாடு செழிக்கப்போகிறது, வரி ஏய்ப்பு குறையப் போகிறது என்று கனவு கண்டேன். விலைவாசிதான் உயர்ந்ததே தவிர, உடனடியாக எந்த மாற்றமும் தெரியவில்லை.

2 திட்டங்களின் பலனையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்கூடாகப் பார்த்தேன். பல தொழில் நிறுவனங்கள் நலிந்தன. பலர் வேலையிழந்தார்கள்.

ஆனாலும், நான் உங்களை ஆதரிப்பதை நிறுத்தவில்லை. “காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் 5 ஆண்டுகள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான், ரிசல்ட் தெரியும்” என்றே நண்பர்களிடம் சொன்னேன். நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறி, 2019 தேர்தலில் பாஜக கூட்டணிக்கே வாக்களித்தேன்.

இப்போது வருந்துகிறேன். ஓர் அரசியல் கட்சியை ஆதரிப்பவனின் ஆதரவு எதுவரையில் நீடிக்க வேண்டும், எப்போது விமர்சகனாக மாற வேண்டும், ச்சே! இது சரிப்பட்டுவராது என்று, எப்போது மாற்றி வாக்களிக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டேன். நான் மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம். அடிநெஞ்சில் இருந்து சொல்கிறேன், எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் பிரதமரே...

காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் நிறைய ஊழல் நடந்திருக்கின்றன எனும் வெறுப்பிலேயே உங்களுக்கு வாக்களித்தோம். அவர்களோடு ஒப்பிட்டால், உங்கள் கட்சி செய்த ஊழல் குறைவென்றே இப்போதும் நம்புகிறேன். ஆனால், 19-ம் நூற்றாண்டில் இருந்து மெல்லத் தத்தி, தவழ்ந்து, உருண்டு புரண்டு நத்தை வேகத்தில் முன்னேறிய இந்நாட்டு ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களை 20, 30 வருடங்களுக்கு பின்னே கொண்டுபோய்விட்டீர்கள் நீங்கள்!

எங்கள் முன்னோருக்கு, சமூகத்தில் எந்த மதிப்பும் இருந்ததில்லை. வெள்ளைக்காரனோ, மனு தர்மத்தை மாற்றிச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றான். எல்லோரும் படிக்கலாம் என்றான். காங்கிரஸ் கட்சியோ தீண்டாமை ஒழிப்புக்கு இயக்கம் நடத்தியது. சாதி இந்துக்கள் எல்லாம் எங்களைக் கோயிலுக்குள் நுழைய அரை மனதுடனாவது ஒப்புக்கொண்டார்கள் என்றால், அதற்கு காந்தியின் நிர்பந்தமும்தான் காரணம். ஆக, எங்களை இந்துக்களாக்கியதே காந்திதான். இன்று அந்தக் காந்தியை உங்களோடு சேர்ந்து திட்டவைத்துவிட்டீர்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோர் எங்கள் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் வேலை செய்தார்கள்.

எங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்கிறோம். கிராமத்துப் பெண் பிள்ளைகளை கல்லூரிக்கெல்லாம் அனுப்புகிறோம். இதெல்லாம் மெல்ல மெல்ல 50 ஆண்டுகளாக நடந்த மாற்றங்கள். அந்த வளர்ச்சி வேகத்தை இன்னும் முடுக்குவீர்கள் என்றுதானே, உங்களுக்கு வாக்களித்தோம்? இப்படி எங்கள் வண்டியையும் கவிழ்த்து, சாலையையும் தோண்டிப் போடுகிறீர்களே நியாயமா?

இப்போதும் எனக்கு உங்கள் மீது கோபம் வரவில்லை. உங்களை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றே நினைக்கிறேன். ‘என்னடா இந்தப் பயல்க எல்லாம் படிக்கிறான், வேலைக்குப் போறான், மச்சு வீடு கட்டுறான், கார் வாங்குறான். இவர்களுக்கு இதெல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது? அந்த சப்ளை லைனை கட் பண்ண வேண்டும்...’ என்று திட்டமிட்டுக் கோடாரியை உங்கள் கையில் கொடுத்துவிட்டார்கள் என்று சந்தேகிக்கிறேன்.

இந்த நாடு பொருளாதார வளர்ச்சி பெற்றதால்தானே, இந்தப் பயல்களுக்கு எல்லாம் சமூக நலத்திட்டங்களுக்குத் தாராளமாகச் செலவிடுகிறது? 100 நாள் வேலை எல்லாம் கொடுக்கிறது? அதை முதலில் நொறுக்க வேண்டும் என்று நாட்டின் பொருளாதாரத்தையே வீழ்த்திவிட்டார்களே. நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, வேலைவாய்ப்பையும், தொழில்வாய்ப்பையும் நசுக்கினாலே, புதிதாகக் கடந்த 40, 50 ஆண்டுகளில் தலைதூக்கியவன் எல்லாம் கீழே விழுவான் என்கிற அவர்களின் கணக்கு கச்சிதமாக வேலைசெய்கிறது.

கஞ்சிக்கே வழியில்லாமல் போனால் ஒரு குடும்பஸ்தன் முதலில் எதில் கைவைப்பான்? வீட்டுக்குப் பத்திரிகைகள் வாங்குவதை நிறுத்துவான். அடுத்து, பெண் பிள்ளைக்கு எதற்குப் படிப்பு என்று யோசிப்பான். பிறகு ஆண் பிள்ளைகளை மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றுவான். அதுதான் இங்கே நடக்கிறது. மற்றவர்களை விடுங்கள், நானே பிள்ளைகளைப் பள்ளி மாற்றிவிட்டேன். லோன் போட்டு கட்டிய வீட்டை விற்க ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டுப் பெண்கள் அடுப்பெரிக்க விறகு பொறுக்கச் சென்ற காலம் போய், கியாஸ் அடுப்பில் சில நிமிடங்களில் சமைத்து முடித்து, டிவியில் செய்தியும், சீரியலும் பார்த்தார்கள். இப்போது கியாஸ் விலையை உயர்த்தி, அவர்களை மீண்டும் விறகு பொறுக்க அனுப்பிவிடுவீர்கள் போல. புதிதாய் கார் வாங்கியவன் எல்லாம் பெட்ரோல் போட முடியாமல் ஏற்கெனவே ஓரங்கட்டிவிட்டான்.

யோசித்துப் பார்த்தால், இந்த நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவை மதச்சார்பின்மை, சோசலிஸம், சமூகநீதி. அத்தனையையும் உங்கள் சித்தாந்தத்துக்கு எதிரானது என்று கெடுத்துவிட்டீர்கள்.

எந்தச் சித்தாந்தத்தை வேண்டுமானாலும் பேசுங்கள். மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டாமா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டாமா? கறுப்புப் பண மீட்பு, வேளாண் வருவாயை இருமடங்காக்குவோம், 2.5 கோடி பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு, இந்திய ரூபாயின் மதிப்பை அமெரிக்க டாலருக்கு நிகராக்குவோம், அமெரிக்கர்களை இந்திய விசா கேட்டு வரிசையில் நிற்க வைப்போம் என்றெல்லாம் சொன்னீர்களே... எவ்வளவு பெரிய பொய்?

ஒரு நாடு முன்னேற முன்னேற, மக்களின் மத உணர்வுகள் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்திருக்கின்றன என்பதுதான் வரலாறு. ஆனால், நம் நாட்டிலோ மதவெறி முற்றுகிறது. அதுவும் பிற மதத்தினருடன் பழகினாலே பாவம் என்கிற அளவுக்கு, இந்து மதத்தினரை மூளைச்சலவை செய்கிறார்கள் உங்கள் ஆட்கள்.

முன்பெல்லாம் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள் நீங்கள். இப்போதோ, தேர்தல் கணக்குகளுக்காகத் திட்டங்களைத் திரும்பப் பெறுகிறீர்கள். சமீபத்திய உதாரணம், வேளாண் சட்டங்கள். இது உங்கள் அணுகுமுறையே அல்ல. தேர்தலுக்காக நிறைய வளைந்துகொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அதற்குப் பின்னால், இன்னும் 10 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டே தீரவேண்டுமென்ற உங்கள் லட்சிய வெறி தெரிகிறது.

”அதிகாரத்தைக் கண்டு ஒருமுறை அனுபவித்துவிட்டவர்கள், வெகுசுலபத்தில் அதைக் கைவிடத் துணிய மாட்டார்கள். என்றும் தன்னிடத்திலேயே அது சிரஞ்சீவியாக நிலைத்திருக்க மிக்க கவலை எடுத்துக்கொள்வார்கள்” என்று அண்ணா சொன்னது நினைவுக்கு வருகிறது.

நம்மைப் போன்றவர், நம்மால் பதவியில் அமர்த்தப்பட்டவர், நமக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து நம்மைத் துச்சமென எண்ணி, கொடுங்கோலாட்சி செய்கிறாரே என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்களோ இல்லையோ, நான் உணர்ந்துவிட்டேன். அதைத் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்.

நன்றி.

இப்படிக்கு,

இன்னமும் உங்களை நம்புகிற ஓர் அப்பாவி இளைஞன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE