எங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை?

By எஸ்.எஸ்.லெனின்

நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பி இருக்கிறது, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம். இந்த நடவடிக்கையை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் ’எங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை..’ என 2 எம்பிக்கள் சோகம் அடைந்துள்ளனர். இதனால், தங்களது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளதாக இவர்கள் வருந்துகின்றனர்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆகஸ்ட் மத்தியில், மாநிலங்களவையில் நடந்த அமளி தொடர்பாகவே தற்போதைய 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ கட்சிகளைச் சேர்ந்த இந்த எம்பிக்களின் பட்டியலில் முக்கியமான இருவரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் சிங் பஜ்வா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்செய் சிங் ஆகிய இருவரும், மேற்படி போராட்டத்தில் உக்கிரமாகக் களமாடியவர்கள்.

தங்கள் குரலுக்கு அவை செவிமெடுக்கவில்லை என்ற கோபத்தில், இந்த இருவரும் அவைத் தலைவர் முன்பாக உரக்க வாதிட்டு வந்தனர். அதிலும் பிரதாப் சிங் பாஜ்வா, கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் அவைத் தலைவரை நோக்கி விட்டெறிந்தார். அப்போதே பிரதாப் சிங் மீது நடவடிக்கை உறுதி என உறுப்பினர்கள் மத்தியில் பேச்சு நிலவியது.

மாநிலங்களவை

ஆனால், மாதங்கள் கழித்து வெளியான அமளி எம்பிக்கள் சஸ்பெண்ட் பட்டியலில் இந்த இருவரும் இடம்பெறவில்லை. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 2 எம்பிக்களும் மக்கள் மத்தியில் பெயர் பெறுவதைத் தடுக்கவே, சஸ்பெண்ட் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், பிரதாப் சிங், குர்தாஸ்பூர் சட்டப்பேரவைத் தொகுதியை குறிவைத்து ஏற்கெனவே பம்பரமாகச் செயல்பட்டு வருபவர். மாநிலங்களவை அமளியை ஒட்டி, கட்சி மத்தியில் அவருக்கு நற்பெயர் கிடைத்திருந்தது. சஸ்பெண்ட் ஆகியிருந்தால், தேர்தல் பிரச்சாரத்தில் அதை முன்வைத்து பெயர் பெறவும் திட்டமிட்டிருந்தார். தொகுதியில் ஜெயித்து அமைச்சராவது வரை கனவுகள் வைத்திருந்தார்.

பிரதாப் சிங் பாஜ்வா

பிரதாப் சிங் போலவே, ஆம் ஆத்மியின் சஞ்செய் சிங்குக்கும் தனியான அரசியல் கணக்குகள் இருந்தன. இந்த 2 ’ஹீரோக்களும்’ தங்களது ’அவை சாகசங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும், இதனால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவும்’ வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.

இது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்த அவைச் செயலக அதிகாரிகள், ’இரு எம்பிக்களுக்கும் எதிரான குற்றச்சாட்டை நிறுவும்படியான சிசிடிவி பதிவுகள் இல்லை’ என்று கூறியுள்ளனர். மேலும், ’12 எம்பிக்கள் சஸ்பெண்ட் என்பது ஆக.11 அமளி தொடர்பான நடவடிக்கை என்றும், இந்த 2 எம்பிக்களும் ஆக.10 அன்று அமளியில் ஈடுபட்டவர்கள்’ என்றும் கூடுதல் விளக்கமும் தந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE