அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்: கடந்துவந்த அரசியல் பாதை

By என்.சுவாமிநாதன்

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்துள்ளது தலைமை. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன், 68 ஆண்டுகளாக அரசியலில் பயணித்து வருபவர். அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்தத் தமிழ்மகன் உசேன்?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் அதிமுகவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராகவும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இதற்கு முன்பு வக்பு வாரியத் தலைவராகவும் இருந்தார் தமிழ்மகன் உசேன்.

ஆரம்ப காலத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த தமிழ்மகன் உசேன், குமரி மாவட்ட எம்ஜிஆர் ரசிகர் மன்ற அமைப்பாளராகவும் இருந்தார். எம்ஜிஆரின் ஆசியால் திமுக ஆட்சிக்காலத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார். பயணிகளை ஏற்றிக்கொண்டு, தமிழ்மகன் உசேன் மதுரையை நோக்கிப் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் அருகில் சாலையில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அந்த பரபரப்பான சூழலைப் பார்த்துவிட்டு தமிழ்மகன் உசேன் பேருந்தை நிறுத்திவிட்டு விசாரித்தார். திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டுவிட்டார் என கூடியிருந்தவர்கள் சொல்ல, உடனே தன் ராஜினாமா கடிதத்தை எழுதி நடத்துநரிடம் கொடுத்துவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் உசேன். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும்வரை அவருடனேயே முகாமிட்டு இருந்தவரை, குமரி மாவட்ட அதிமுக அமைப்பாளர் பொறுப்பு கொடுத்து அனுப்பி வைத்தார் எம்ஜிஆர்!

தமிழ் மகன் உசேன்

குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எந்த சட்டப்பேரவைத் தொகுதியிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்திலும் இல்லை. ஆனாலும் மதம் கடந்து, தன் மீதான விசுவாசத்தின் அடிப்படையில், குமரி மாவட்டத்தின் முதல் அமைப்பாளராக தமிழ்மகன் உசேனை நியமித்தார் எம்ஜிஆர். இதேபோல் ஒருமுறை எம்ஜிஆருக்கும், உசேனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது, அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான தென்னகத்தில் ‘உசேனை இழக்க மாட்டேன்’ என எம்ஜிஆரே கடிதம் எழுதினார்.

ஒருமுறை கட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக, கொடிக்கம்பத்தில் கொடி கட்டிக் கொண்டிருந்த தமிழ்மகன் உசேன் அதில் இருந்து கீழேவிழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து அவ்வப்போது எம்ஜிஆரே நலம் விசாரித்து வந்தார். இந்த அளவுக்கு அரசியலில் நீண்ட, நெடிய காலமாக இருந்துவரும் தமிழ்மகன் உசேனுக்கு இப்போது கட்சியின் உயரிய அங்கீகாரமான அவைத் தலைவர் பதவி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து சிலதினங்களுக்கு முன்பு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில், அந்த சமூகத்தைத் திருப்திப்படுத்தும்வகையிலும் உசேனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது அதிமுக தலைமை. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் அணியிலும் சிக்கிக்கொள்ளாத நபர் எனவும் பெயர் எடுத்தவர் என்பதும், இவர் பெயரை டிக் செய்ய காரணமாக இருந்திருக்கிறது.

VIEW COMMENTS