”சோனியாவின் அரசியல் காலம் முடிந்துவிட்டது; அவருக்கு பதில் எதிர்க்கட்சிகளை இனி மம்தா பானர்ஜியே வழி நடத்துவார்” என்று பாஜக திருவாய் மலர்ந்திருக்கிறது. பாஜகவின் ’பி டீமா’க திரிணமூல் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் பாஜகவின் புதிய ஆருடம், மம்தாவுக்கான புகழாரமாகவும், சோனியாவுக்கான வாரலாகவும் மாறி இருக்கிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி தனிப்பெரும் ஆட்சி அமைத்திருக்கும் மம்தா பானர்ஜி, அதே சூட்டில் தேசிய அரசியல் மீதும் கண் வைத்தார். பாஜகவுக்கு எதிராக ஒரே குடையின்கீழ் எதிர்க்கட்சிகள் திரள வேண்டும் என்று பலமுறை குரல் கொடுத்தார். அதற்கு, தங்களை விட்டால் வேறு வழியில்லை என்பது போல காங்கிரஸ் கட்சி அமைதி காத்தது. பொறுத்துப் பார்த்த மம்தா பானர்ஜி தனியாவர்த்தனமாய் களமிறங்கினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்துக்கு வெளியேயும் வளர்ப்பதில் மம்தா தீவிரமானார். பல்வேறு வட இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இக்கட்சி போட்டியிட உள்ளது. அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக திரிணமூல் காங்கிரஸை முன்னிறுத்த ஆரம்பித்தார்.
பாஜகவுக்கு எதிராக என்று ஆரம்பித்த மம்தா ஆதரவு அலை, ஆரம்பம்தொட்டே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வீசி வருகிறது. கோவாவில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி திரிணமூலில் சேர்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியபோது, காங்கிரஸ்-திரிணமூல் இடையிலான விரிசல் பெரிதாக வெளிப்பட்டது.
மாநிலங்களவையின் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தை திரிணமூல் புறக்கணித்தது. முன்னதாக வளாகத்தின் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் முன்னெடுத்த எதிர்க்கட்சியினர் அடையாளப் போராட்டத்தையும் புறக்கணித்தது.
டெல்லி வந்த மம்தாவிடம், ’சோனியா காந்தியை சந்திப்பீர்களா’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ”அது மிகவும் முக்கியமானதா?” என்று எதிர்கேள்வி வீசினார் மம்தா. இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் மீது பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. கணிசமான காங்கிரஸ் தலைவர்களை இழந்துள்ள கோவாவின் காங்கிரஸ் முகாம், இதை வெளிப்படையான குற்றச்சாட்டாக முன்வைத்தது.
இவற்றின் மத்தியில், பாஜக தரப்பிலிருந்தும் மம்தா பானர்ஜிக்கு புகழாரங்கள் எழுந்துள்ளன. மேற்குவங்கங்கத்தை சேர்ந்த பாஜக எம்பியான திலிப் கோஷ் என்பவர், கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார். அவர், “சோனியா காந்தியின் அரசியல் காலம் முடிந்துவிட்டது; இனி எதிர்க்கட்சிகளை மம்தா பானர்ஜி வழி நடத்தப் போகிறார்” என்று புகழ்ந்துள்ளார். சொந்த மாநிலப் பாசம் பேசுகிறதா அல்லது காங்கிரஸுக்கு எதிராக மம்தாவை கொம்பு சீவுகிறாரா என்று தெரியவில்லை.
ஆனால், இவையனைத்தும் காங்கிரஸ் தலைமையை மேலும் சீண்டியுள்ளன. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியை கிட்டத்தட்ட இல்லாமல் செய்துவிட்ட மம்தா, தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸாரை இழுத்து வருவதை அக்கட்சி சீற்றத்துடன் கவனித்து வருகிறது.
பாஜகவுக்கு எதிராக எனத் தொடங்கிய மம்தாவின் டெல்லி நோக்கிய பயணம், காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பியதை, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் இதர கட்சிகளும் ரசிக்கவில்லை. இந்தச் சூழலில் தேசிய சக்தியாக மம்தா வளர்வதற்கு இவர்களின் ஆதரவு கிட்டுவதும் கடினமே. என்ன செய்யப்போகிறார் மம்தா?